பாலோ மன்ஜியும் ஒன்பது கட்டுமானத் தொழிலாளர்களும் அருகிலுள்ள காடுகளிலிருந்து விறகுகளை எடுத்து வரவேண்டிய ஒரு அசாதாரணமான பணிக்கு மாறினர்.
"ஒவ்வொரு மூன்றாவது அல்லது நான்காவது நாள், நாங்கள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பிச் சென்று, மதியத்திற்குள்ளாக, தலா 10-12 கிலோ விறகுகளைச் சுமந்துகொண்டு திரும்புவோம்," என்கிறார் பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள அர்பா பஞ்சாயத்தில் தனது வீட்டருகே கட்டிலில் அமர்ந்திருக்கும் 55 வயதான பாலோ.
"அந்த விறகுகளை வைத்து 10 பேருக்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்குச் சமைத்து விடுவோம். ஆனால், நாங்கள் அரிசியோடு, பருப்பு அல்லது காய்கறிகளை சேர்த்து சமைத்து விடுவோம். மூன்றையும் தனித்தனியாக சமைக்க அதிக விறகுகள் தேவைப்படும்."
தமிழ்நாட்டில், சென்னையின் ஒரு முக்கிய புறநகர் பகுதியான தாம்பரத்தில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் வேலை செய்த நாட்களை அவர் நினைவு கூர்கிறார்.
தொடர்ந்து நிலவி வரும் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) நெருக்கடிக்கு, பாலோவும் அவரது சக புலம்பெயர் தொழிலாளர்களும் வகுத்த இந்தத் தற்காலிகத் தீர்வு இரண்டு வாரங்களுக்கு மட்டுமே உதவியது. "எப்போதும் விறகு கிடைப்பது சாத்தியமில்லை," என்கிறார் அவர்.








