மச்சிவாலா கிராம மக்கள், இயற்கைப் பேரிடரின் போது வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் இருந்து ஒரு கோப்பை தேநீரை இந்த நிருபருக்கு வழங்கினர். ராவி ஆற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளத்தால் கரையோரப் பகுதிகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளன. வண்டல் மணலாலும் நீராலும் நிலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. மக்கள் தப்ப வழியின்றி, தற்காலிகக் கூடாரங்களில் தங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் மாத வெள்ளத்தில் அவர்கள் தங்களுக்கான அனைத்தையும் இழந்தனர்.
மச்சிவாலா கிராமத்தின் ராம்தாஸ் பகுதியில் ராவி நதியின் வெள்ளம் அடித்துச் செல்வதற்கு முன்பாகத் தனது வீடு இருந்த இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக வீட்டில் அமர்ந்திருக்கிறார் சரப்ஜித் கௌர். தனது வாழ்வில் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பு குறித்து விவரிக்கும்போதும் கூட முகத்தில் முன்னகையை இழக்கவில்லை கௌர்.
“இரவு முழுவதும் செயற்கை கரைகளை வலுப்படுத்த முயற்சித்தோம்,” என்று பாரியிடம் விவரிக்கிறார் 18 வயதான அவர். “ஆகஸ்ட் 27 [2025] அன்று காலை 6 மணிக்குக் குருத்துவாராவில் ஒலிப்பெருக்கி மூலம் ஓர் அறிவிப்பு வந்தது. அதாவது, மணலால் உருவாக்கப்பட்ட அணைக்கரை உடைந்துவிட்டது என்பதே அந்த அறிவிப்பு. கிராமம் முழுவதும் அந்த அறிவிப்பு பரவியது. நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்காக உயர்வான பகுதியை நோக்கி ஓடினோம்.”
அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமமான மச்சிவாலாவில் சுமார் 1,186 மக்கள் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்புபடி) வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஜாட் சீக்கியர் மற்றும் ராய் சீக்கியர் சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ராய் சீக்கியர்கள் பஞ்சாபில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள தலித் குடும்பங்கள் பெரும்பாலும் சிறிய நிலத்தில் விவசாயம் பார்ப்பது, பிறர் நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்வது போன்றவற்றின் மூலம் வாழ்ந்து வருகின்றனர்.
சரப்ஜித்தின் குடும்பம் நிலமற்ற ராய் சீக்கியர் சமூகத்தினர் ஆவர். விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். விவசாயத் தொழிலாளியான அவரின் தாய் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். அவரின் தந்தை கால்-கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரால் வேலை செய்ய இயலாது. இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ள அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் தொழிலாளர்களாக வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகின்றனர்.
வெள்ளம் கிராமத்தை 3 முதல் 4 நாட்கள் வரை சுமார் 8 அடி நீருக்குள் மூழ்கடித்திருந்தது. அது விவசாயிகளின் சிறிய வீடுகளை நாசப்படுத்தியது. பருவகாலத்தில் விளைவிக்கப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த கோதுமைப் பயிர்களை முழுவதுமாகச் சேதப்படுத்தியது. நிலத்தை வண்டல் மண் மூழ்கடித்தது. பெரிய நீலகிரித் தைல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
















