எ பெரா பேட்டி இயம் டானி மார்ச்சி பாரி டெ, பெரா பேட்டி இயம் டானி
தானி செ தடா ஜோ தெனாம் ரெ, பிஹா கொதே நி
மன் மஜூர் தெனா லா ரெ, பிஹா கோதே நி,
மார்ச்சி பாரி தே, பெரா பேட்டி இயம் தானி
தானி சே தடா ஜோ தெனாம் ரெ, பிகா கோதே நி
(எங்களின் மகள் பச்சைமிளகாய் வயலில் அழுகிறாள்
தந்தையே, பந்தயத்தை முடித்து வையுங்கள் என்கிறாள், தாலி கட்ட வையுங்கள்
ஒருவரையொருவர் காதலிக்கிறோம், தந்தையே, அவரை எனக்கு மணம் முடித்து வையுங்கள்
எங்களின் மகள் பச்சைமிளகாய் வயலில் அழுகிறாள்
தந்தையே, பந்தயத்தை முடித்து வையுங்கள் என்கிறாள், தாலி கட்ட வையுங்கள்)
பாடுகையில் லக்கேஷ்வரி பாய் காரியா வேறொரு உலகத்துக்கு பயணிக்கிறார். கண்கள் தாழ்ந்து, கையில் பிடித்திருக்கும் ஒலிவாங்கியை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. அது அவருக்கு அசாதாரணமான தருணம். லக்கேஷ்வரியை சுற்றி இருப்பவர்கள் அவரது பாடலை, பேசும் மொழியை கேட்க ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும், அவரது மனம் ஒரு மில்லிசெகண்டில் 160 கிலோமீட்டர் பயணித்து ராய்கருக்கு செல்கிறது. இந்த சத்தங்கள் அவரது பால்யகாலத்தை நிரப்பியிருந்து பகுதி அது.
“யாரிடம் நான் பேச வேண்டும்? என் கணவர் வீட்டார் உயிருடன் இல்லை. குழந்தைகளிடம் ‘தாய்மொழியில் பேசுங்கள். என்னிடம் மொழியை கற்றுக் கொள்ளுங்கள்’ என சொல்கிறேன். ஆனால் கேட்க மறுக்கிறார்கள். பேரக் குழந்தைகளை கூட விடுங்கள். இந்த மொத்த கிராமத்திலும் காரியா மொழி பேசும் ஒரே நபர் நான்தான்,” என்கிறார் படாந்தடாரின் பழங்குடி பெண், துயரம் தோய்ந்த குரலில்.
மகாசமுண்ட் மாவட்டத்திலுள்ள இந்த கிராமத்தில் ‘ஜுனா’ என்ற பெயரில் அறியப்படும் லக்கேஷ்வரி பாய், புதுவா காரியாவை மணம் முடித்ததிலிருந்து இங்கு வசித்து வருகிறார். தற்போது அறுபது வயதுகளில் இருக்கிறார். அரசாங்கத்திடமிருந்து கிடைத்த சில ஏக்கர் நிலத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாததால், கணவனும் மனைவியும் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கின்றனர். ”ராய்கரிலிருந்து இங்கு வந்தபோது கணவர் வீட்டாருடன் காரியா மொழியில் நான் பேசினேன். இப்போது அவர்கள் இல்லை. அம்மொழியை நான் பேசக் கூடிய எவரும் இல்லை,” என்கிறார் லக்கேஷ்வரி. ”வார்த்தைகளை சரியாக உச்சரிக்கவும் முடியாததால், அம்மொழி பேசுவதில்லை,” என விளக்குகிறார் கணவர் புதுவா. “சட்டீஸ்கரி மொழிதான் இங்கு ஆளுகிறது. இந்த மொழியை யார் புரிந்து கொள்வார்?”




