"எங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும் என்று கூறி எங்களுக்கு அவர்கள் துரோகம் செய்துவிட்டனர்", என்று ஜுன்வானி கிராமத்தைச் சேர்ந்த ப்ரீதம் குஞ்சம் கூறுகிறார். "நிலத்தை எடுத்துக் கொண்ட பிறகு, அதிகாரிகள் எங்களுக்கு ஒரு சிறிய பகுதியை மட்டும் குத்தகைக்கு கொடுத்து, எங்களுக்கு சொந்தமானது என்று நம்ப வைக்க முயற்சிக்கின்றனர். எங்களில் சிலர் எங்கள் வீடுகள், வயல்கள் மற்றும் முற்றங்களை இழந்துள்ளோம். ஆனால் உண்மையில் இழந்தது புல்வெளிகள், காடுகள், பொது நிலங்கள், கல்லறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள். எங்கள் நிலத்தைத் திரும்பப் பெற அரசு அலுவலகங்களுக்கு பல மாதங்களாக சென்று கொண்டிருக்கிறோம். ”
ராய்ப்பூரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள ஜுன்வானி மக்கள், தங்கள் நிலத்தைத் திரும்பப் பெற 2015-ம் ஆண்டு டிசம்பரில் போராட்டத்தைத் தொடங்கினர். அவர்கள் பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் சட்டம் அல்லது வன உரிமைகள் சட்டத்தின் (FRA) கீழ் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். 2006-ம் ஆண்டு டிசம்பரில் இயற்றப்பட்ட இந்த சட்டம் 2008 ஜனவரி 1, முதல் நடைமுறைக்கு வந்தது. வன உரிமைகள் சட்டம் இந்தியா முழுவதும் உள்ள பழங்குடிகளுக்கு பாரம்பரிய வன உரிமைகளை மீட்டெடுக்க வழிவகுக்கிறது. 2005-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நிலவரப்படி பழங்குடிகள் விவசாயம் செய்து வந்த நிலங்களுக்கு சிறு வன விளைபொருட்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துவதற்கான சமூக உரிமைகளையும், தனிப்பட்ட உரிமைகளையும் இது வழங்குகிறது.
வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலங்களை குத்தகைக்கு விடுவதில் சத்தீஸ்கர் அரசு மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதாகக் கூறினாலும், 2015 நவம்பர் 15 அன்று ராய்ப்பூரில் நடைபெற்ற வன உரிமைகள் குறித்த பயிலரங்கில் வழங்கப்பட்ட தரவுகள் வேறுபட்ட உண்மையை சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த ஏழு ஆண்டுகளில் பழங்குடிகளின் தனிப்பட்ட கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அல்லது வன உரிமைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட சுமார் 512,000 கோரிக்கைகளை மாநில அரசு நிராகரித்துள்ளது. வயது வந்தவருக்கு 2.5 ஏக்கர் என்ற சட்டத்திற்கு மாறாக, சத்தீஸ்கர் அரசு ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 2 ஏக்கர் வனப்பகுதியை மட்டுமே அங்கீகரித்துள்ளது.
சத்தீஸ்கரில் 44 சதவீத நிலங்கள் காடுகளாக இருக்கும்போது, அவற்றுக்கு உரிமையுள்ளவர்களுக்கு இந்த உரிமைகளை வழங்காதது இன்னும் கவனத்தைப் பெறுகிறது. பயிற்சி பட்டறை ஒன்றுக்கு அளித்த தரவுகளில், திரிபுரா மற்றும் கேரளா ஆகியவை இதேபோன்ற தனிப்பட்ட கோரிக்கைகளில் 34 சதவீதத்தை மட்டுமே நிராகரித்துள்ளன என்பதை சுட்டிக் காட்டுகின்றன.
ஜுன்வானில் ஊராட்சி வாக்காளர் பட்டியலின்படி 265 வாக்காளர்கள் உள்ளனர் - 662 ஏக்கர் அவர்களுக்கு தனிப்பட்ட உரிமையாக வழங்கப்பட வேண்டும். ஆனால் உள்ளூர் ஆர்வலர் பெனிபுரி கோஸ்வாமி கூறுகையில், "பல தசாப்தங்கள் பழைய ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 180 ஏக்கர் மட்டுமே தனிப்பட்ட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது," என்று கூறுகிறார். சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை பிரச்சனைகள் குறித்த புவனேஸ்வரை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் கொள்கைக் குழுவான வசுந்தராவின் நிர்வாகக் குழுவின் தலைவர் மது சரின் கூறுகையில், "எங்கள் சட்டம், வயது வந்தவருக்கு 2.5 ஏக்கர் நிலத்தை அனுமதிக்கிறது. ஆனால் அவர்கள் அதற்கு மாற்றாக ஒரு சிறிய பகுதியைக் கொடுத்துள்ளனர். அதுவும் தந்தையின் பெயரில் மட்டுமே." ஜுன்வானில் பெண்களுக்கு எந்த நிலமும் வழங்கப்படவில்லை என்று குஞ்சம் கூறுகிறார். “ஒரு பெண்ணின் பெயர் கூட பதிவு செய்யப்படவில்லை.” மேலும், குத்தகைகளுடன் எந்த அடையாளமோ, வரைபடமோ வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.




