

Kolhapur, Maharashtra
|TUE, JAN 27, 2026
‘அவனின்றி நானில்லை’
பாரி தன்னார்வலர் சங்கேத் ஜெயின், இந்தியா நெடுகிலும் உள்ள 300 கிராமங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். பிற கட்டுரைகளுடன் கிராமப்புற வாழ்வியலை அல்லது நிகழ்வுகளின் புகைப்படங்களை ஓவியமாக வரைந்து அளிப்பது இதன் அம்சமாகும். இது பாரியில் வெளியாகும் ஆறாவது தொடராகும். புகைப்படம் அல்லது ஓவியத்தை முழுமையாக காண ஸ்லைடரை இழுக்கவும்
Author
Translator
பாரி தன்னார்வலர் சங்கேத் ஜெயின், இந்தியா நெடுகிலும் உள்ள 300 கிராமங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். பிற கட்டுரைகளுடன் கிராமப்புற வாழ்வியலை அல்லது நிகழ்வுகளின் புகைப்படங்களை ஓவியமாக வரைந்து அளிப்பது இதன் அம்சமாகும். இது பாரியில் வெளியாகும் ஆறாவது தொடராகும். புகைப்படம் அல்லது ஓவியத்தை முழுமையாக காண ஸ்லைடரை இழுக்கவும்
“இந்த காளைதான் என் உயிர்,” என்கிறார் 15 வயதிலிருந்து விவசாயம் செய்து வரும் மகாதேவ் கோட். இப்புகைப்படத்தில் அவரது இடது கால் விறைத்து இருப்பதை நீங்கள் காணலாம். அவர் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம் லக்ஷ்மிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். 9 வயதில் வயலில் விஷ முள் குத்தி தொற்று ஏற்பட்டதில் அவரது இடது கால் நீக்கப்பட்டது. இன்று அவர் செயற்கை காலுடன், கையில் தடி பிடித்தபடி விவசாய வேலைகளை கண்காணிக்கிறார்.
அவர் தனது சகோதரருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை, மக்காச்சோளம் விளைவிக்கிறார். ஹட்கனங்கல் தாலுக்காவில் உள்ள அவரது கிராமத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு நிலமும், 3 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு நிலமும் உள்ளது.
“தண்ணீர் தட்டுப்பாடு, கால் காயம் காரணமாக பத்தாண்டுகளாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான இடத்தில் உள்ள இந்த வயல் தரிசு நிலம்,” என்று அவர் குறிப்பிடுகிறார். மகாதேவ் (தற்போது வயது 60களில் உள்ளவர்) அன்றாடம் தனது மாட்டு வண்டியில் சுமார் 6 கிலோமீட்டர் பயணிக்கிறார். வயல்களுக்கு சென்றுவிட்டு தனது கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வருகிறார். “இவன் தான் என்னை எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்கிறான், அவன் நின்றுவிட்டால் என் வாழ்வும் நின்றுவிடும்.”
“1980களில் 12 மணி நேரம் வேலை செய்தால் எனக்கு ரூ.10 கிடைக்கும் – மற்றவர்களின் வயல்களுக்குச் சென்று ஒரு டன் கரும்பு வரை வெட்டுவேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார். இன்று அவருக்கு ரூ.200 கிடைக்கும். ஆனால் காலில் ஏற்பட்ட காயத்தால் அந்த வாய்ப்பின்றி போனது. சகோதரரின் வயலில் இருந்து அவருக்கு கடந்தாண்டு நல்ல விளைச்சலைப் பெற முடியவில்லை. பெரும்பாலான பயிர்களை விலங்குகள் நாசமாக்கிவிட்டன. “இறுதியில் எனக்கு தலா 35 கிலோகிராம் எடையில் இரண்டு மூட்டை நிலக்கடலை கிடைத்தது. அடுத்த நடவுக்கு தேவைப்படும் என்று நான் அதை விற்கவில்லை. எனது உறவினர்களுக்கு மட்டும் கொஞ்சம் கொடுத்தேன்.”
“இந்த வயலில் என் மனைவி ஷலபாயும் வேலை செய்கிறாள், மற்றவர்களின் வயல்களிலும் கூலி வேலை செய்வதோடு, பழங்களும் விற்கிறாள்,” என்கிறார் மகாதேவ். ஷலபாயின் கடுமையான நாள் அன்றாடம் காலை 5 மணிக்கு தொடங்குகிறது. அவர் மலைச்சரிவில் பழங்களை தேடிச் செல்வதும் உண்டு. லக்ஷ்மிவாடி அருகே அல்லமா பிரபு டோங்கார் (மலை) வயலில் வேலை செய்யும் மகாதேவிற்கு அன்றாடப் பணி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.600 உதவித்தொகை அவர்களுக்கு ஓரளவு உதவுகிறது.
வயது 50களில் இருக்கலாம் என கருதப்படும் ஷலபாய் கோட் பேசுகையில், “அவரது அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம் வேலை செய்தேன். இப்போது வாழ்க்கை தேவைக்கு 10 மணி நேரத்திற்கு மேல் உழைக்கிறேன்.” ஆண்டில் (அக்டோபர் தொடக்கத்தில்) 45 நாட்கள் அவர் பழங்கள் விற்கிறார். “இதற்காக நரண்டி கிராமத்திற்கு [3 கி.மீ. தொலைவு] நடந்து செல்ல வேண்டும், காலை 6 மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும்.” அவர் விவசாய கூலியாக சவர்டி, அல்டி, நரண்டி ஆகிய அருகமை கிராமங்களில் வேலை செய்கிறார். “ஏழு மணி நேரம் வேலை செய்தால் ரூ.100, ரூ.150 கிடைக்கும், ஆண்களுக்கு ரூ.200 கிடைக்கும். வயல்களில் பெண்களே அதிக நேரம் வேலை செய்கின்றனர், ஆனால் ஆண்களுக்குத் தான் கூடுதல் கூலி வழங்கப்படுகிறது,” என்றார்.
அவர்களது இரண்டு மகன்களும் லக்ஷ்மிவாடியைவிட்டுச் சென்றுவிட்டனர். ஒருவர் கூலித் தொழிலாளியாகவும், மற்றொருவர் பல கிராமங்களில் விவசாய கூலியாகவும் உள்ளனர். “எனது அறுவை சிகிச்சைக்கு ரூ.27,000 செலவானது, ரூ.12,000 கடன் வாங்கினேன். எனது மகன்கள் சில ஆண்டுகளில் அக்கடனை அடைத்துவிட்டனர். அவர்கள் எங்களுக்கு அவ்வப்போது பண உதவி செய்கின்றனர்,” என்கிறார் மகாதேவ்.
தமிழில்: சவிதா
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/if-he-stops-my-life-will-also-stop-ta

