ஆகஸ்ட் 2023-ல் ஆஃபியா காதுனின் பாடல் வைரல் ஆனது.
அது எதிர்பாராமல் நடந்தது: X தள பயனர் ஒருவர், அவருடைய காணொளியை பகிர்ந்தார். அஸ்ஸாமிலுள்ள வங்க இஸ்லாமியர் பேசும் வட்டார வழக்கில் காதுன் பாடும் பாடலை அக்காணொளி கொண்டிருந்தது. அவருடன் அவரது இரு மகன்கள் தொதாரா (வங்க நாட்டுப்புற இசையில் பயன்படுத்தப்படும் இரு நரம்பு வாத்தியம்) மற்றும் தோல் (மேளம்) வாத்தியங்களை வாசிக்கின்றனர்.
பாடலின் வரிகள்:
ஜோனோதரே’ஐ ஷொபாய் மிலே தானே எஜார் திலே, ஹிமாந்தோ சோர்கார் புலே தையோஷி ரே
ஜோனோதரே ஜலாஹியா, ஹிமாந்தோர் எய் ஜோந்த்ரோனா, ஜோனோதா’ ஷோய்தே அர் பரே நா.
அர் கோதோ ஜலாய்பே பொலோ நா
அர் கோதோ ஜலாய்பே பொலோ நா
(ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கூட்டாக மக்கள் புகார்கள் பதிவு செய்தனர்;
ஹிமாந்தா அரசாங்கம் குற்றம் செய்து விட்டதாக கூறினர்.
மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர், ஹிமாந்தாவின் சித்ரவதையைப் பாருங்கள். மக்களால் தாங்க முடியவில்லை.
இன்னும் எவ்வளவு துன்புறுத்துவீர்கள் என தயவுசெய்து சொல்லுங்கள்
இன்னும் எவ்வளவு துன்புறுத்துவீர்கள் என தயவுசெய்து சொல்லுங்கள்)
குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதாக சொல்லி, அஸ்ஸாம் முழுக்க அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா இஸ்லாமியர்களை கூட்டங்கூட்டமாக கைது செய்ததற்கு பதிலடியாகதான் அப்பாடல் எழுதப்பட்டதாக அவர் கூறுகிறார்.
”ஆழ்ந்த கோபம் மற்றும் என் சமூகம் மொத்தமாக அனுபவித்த துயரம் ஆகியவற்றின் வெளிப்பாடாகதான் பாடல் உருவானது,” என்கிறார் காதுன். “யாரேனும் ஒருவராவது குரலை எழுப்ப வேண்டும்.” 3,900 பேருக்கு மேற்பட்டோர், குழந்தை திருமணங்களை தடுக்கவென பிப்ரவரி 2023-ல் நடந்த முதற்கட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானோர் வங்காளி இஸ்லாமியர்.










