கிருஷ்ண ராணியை பொறுத்தவரை ஏப்ரல் மாதம்தான் கனிவான மாதமாக இருந்தது. பஞ்சாபின் கோதுமை அறுவடைக்காலமான அச்சமயத்தில், கையால் செய்யக்கூடிய - பஞ்சாபி மொழியில் சாஜ் என அழைக்கப்படும் - கூடைகளுக்கான தேவை அதிகரிக்கும். அந்த குறுகிய காலத்தில் அவரது வருமானம், அவரது நம்பிக்கை மற்றும் சுதந்திர உணர்வை போல அதிகரிக்கும்.
17 வருடங்களாக ஏப்ரல் மாதத்தில் கிருஷ்ண ராணிக்கு ஒரே வழக்கம்தான். நாள் அதிகாலை 5 மணிக்கு தொடங்கும். அப்போதுதான் ஃபசில்கா மாவட்டத்திலிருக்கும் அவரின் ஊரான தஹ்லி வாலா போத்லாவிலிருந்து 6 மணி பேருந்தை பிடிக்க முடியும். சாஜ் கட்டு ஒன்றை தலையில் சுமந்தபடி, பக்கத்து ஊர்களுக்கு சென்று நாள் முழுக்க அவர் கூடைகளை விற்பார்.
சமீபகாலமாக அவர்களின் ஒரே வாடிக்கையாளர்களாக இருக்கும் முதிய பெண்கள், பரிச்சயமான வார்த்தைகள் கொண்டு அவரை வரவேற்பார்கள்: “இந்த கூடைகளை எங்கு கொண்டு செல்கிறாய் பெண்ணே? இன்றைய இளம்பெண்களுக்கு இவற்றை பிடிக்க கூட தெரியாது.”
அவர்களின் வார்த்தைகளோ குறைந்து வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையோ அவரை தளரச் செய்ததில்லை. நாற்பது வருடங்களில் ஒருமுறை கூட, குடும்பக் கலையை கைவிடுவதென கிருஷ்ண ராணி யோசித்ததில்லை. “நான் ஏன் விட வேண்டும்? எனக்கு எவரும் உதவிடாதபோது, இந்த கலைதான் எனக்கு சாப்பாடு போட்டது,” என்கிறார் அவர் பிப்ரவரி மாதத்தில் முதன்முறையாக நாங்கள் சந்தித்தபோது. ஜுக்கிக்கு முன் அமர்ந்திருக்கும் ஐம்பது வயதான அவர், மும்முரமாக சாஜ் பின்னிக் கொண்டிருக்கிறார்.



























