கேரளாவின் 9ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் மலையாள மொழி கேள்வித்தாளை திறந்ததும் அதில் தனிச்சிருக்கும்போல் கவிதை இருப்பதை கண்டனர். அமைதி, தனிமை, தனியாக இருக்கும்போது வரும் தெளிவு ஆகியவற்றை குறித்து அந்த வரிகள் பேசியது. மாநிலம் முழுவதும் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தாம் வாசிப்பது இளம் கவிஞர் பி.ஏ.செபாவின் கவிதை என்பது தெரியாது.
அதே 2023ம் வருடத்தில் பிரதிபலிப்புகள், கவிதைகள் மற்றும் காட்சி வெளிப்பாடுகள் கொண்ட விரல் பழுத்திலே ஆகாஷங்கள் என்கிற புத்தகத்தை செபா பிரசுரித்தார். இதிலும் கூட, அவர் துயருற்று வந்த முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு (SMA) நோயிலிருந்துதான் வரிகளை எடுத்தார். தசைகளை வலுவிழக்க வைக்கும் அரிய மரபணு குறைபாடு அது. குணப்படுத்தவென மருந்து ஏதும் இல்லை. அந்த குறைபாடு கொண்ட நோயாளிகள் மெல்ல தங்களின் உடல்கள் மீதான கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்குவார்கள். இறுதியில் சுவாசத்தையும் இழந்து, குழாய் வழியாக சுவாசிக்கும் நிலைக்கு வருவார்கள்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தூரப் பகுதிகளை சேர்ந்த வாசகர்களுக்கோ எழுத்தாளர் அறையை விட்டு பல வருடங்களாக வெளியே வராமல் இருப்பவர் என்கிற உண்மை தெரியாது. மூச்சுக்குழாயுடன் படுத்துக் கிடந்தபடிதான் இந்த வரிகளை அவர் எழுதினார். ஆறு வருடங்களுக்கு மேலாக, செயற்கை மூச்சுக்குழாயில்தான் அவர் சுவாசித்து வருகிறார். நடக்கவோ அமரவோ வலியின்றி விழுங்கவோ அவரால் முடியாது.
27 வயதாகும் செபா, தன் படைப்புலகத்தை செல்பேசியில் பதிவு செய்து உருவாக்கியிருக்கிறார். 2018-ல் தன்னுடைய படைப்புகளை, ஐந்து அங்குல செல்பேசி திரை உருவாக்கிய இணையத்தில் கடும் முயற்சியுடன் அவர் பதிவேற்றத் தொடங்கினார்.
அவரின் படைப்புகளை சமூக வலைதளம் மூலமாக பி. வேணுகோபால் தெரிந்து கொண்டார். “அவரின் வார்த்தைகளில் வெட்டுக்கத்தியின் கூர்மை இருக்கிறது,” என்கிறார் திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்த பத்திரிகையாளர். “நூறு வருடங்கள் வாழ்ந்தும் மென்மையாக இருக்கும் ஒருவரை போல் அவர் எழுதுகிறார்.” இன்றும் அவர் எழுதவும் தொகுக்கவும் சோர்வடையும்போது வேணுகோபால்தான் உதவுகிறார். “மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் அத்தனை அழகுடன் அவர் எழுதுகிறார். அவரின் விரல்கள் ஓய்வை தேடும்போது உதவுவது மட்டும்தான் என் வேலை.”
நம்பிக்கை பற்றிய அவரின் குறிப்புகள் Trapped in a cage but words break free என்கிற தலைப்பில் 2023 புத்தாண்டின் டெலிகிராஃப் இதழின் முகப்புப் பக்கத்தில் தோன்றியது. அவரின் எழுத்துகளை முகநூலில் கண்ட ஆசிரியர், அவற்றை பிரசுரிக்க விரும்பியிருந்தார். அதற்குப் பிறகு அவரின் மலையாள எழுத்துகள் யாவும் விரல் பழுத்திலே ஆகாஷங்கள் (விரலிடுக்கின் வழியாக பார்க்கப்பட்ட வானம்) என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. கேரளாவின் தொழிற்துறை அமைச்சர் பி.ராஜீவ், ஜனவரி 2023-ல் எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் புத்தகத்தை வெளியிட்டார். தாயின் செல்பேசியிலிருந்து நிகழ்ச்சியை தன் அறைக்குள்ளிருந்து அவர் பார்த்தார்.
“அவர் தொடர்ந்து, ‘அம்மா பாருங்கள். என் வானம் மற்றவர்களை அடைந்துவிட்டது,’ என சொல்லிக் கொண்டிருந்தார்,” என்கிறார் அவரின் தாய்.










