கலிந்தி குஞ்ச் படித்துறையின் தெற்கு பக்கத்தில் ஆறு விரிவடைகிறது. காற்று ரசாயன நாற்றத்தில் அடர்கிறது. ரசாயன வெள்ளை நுரைகள் அங்கு மிதக்கிறது. காற்று, தொண்டையை அடைக்கிறது.
இங்கு 41 வயது ஃபெரோஸ் மாலிக் இன்னொரு வகையான சேவையை வழங்குகிறார். யமுனை ஆற்றின் நீர் கழிவால் அடர்த்தியாக இருந்தாலும் அஸ்தியை கரைக்க அவர் உதவுகிறார். “என்னால் நீரினுள் சுவாசிக்க முடியாது. யாரேனும் உள்ளே சிக்கிக் கொண்டால், உயிர் பிழைக்க முடியாது,” என்கிறார் அவர். எனினும் அந்த நீரில் மூழ்குவது ஃபெரோசுக்கு தினசரி வேலை.
டெல்லியில் யமுனா சில பகுதிகளில் மட்டும்தான் உயிர்ப்புடன் இருக்கிறது. யமுனையை சார்ந்தவர்களின் வாழ்க்கை எப்படி திணறுகிறதோ அதே போல்தான் ஆறும் திணறிக் கொண்டிருக்கிறது. பனார்சி, ஃபெரோஸ் போன்றவர்கள் இங்கு ஆபத்தான வேலை செய்துதான் வருமானம் ஈட்டுகிறார்கள்.
ஆறு அமைதியாக தவித்துக் கொண்டிருக்கிறது. அதை சார்ந்தவர்களும் அதே போல தவித்துக் கொண்டிருக்கின்றனர். முக்குளிப்பவர்கள், ரசாயனம் நிறைந்த நீரில் இறங்கி, மூழ்கிக் கொண்டவர்களை காக்க வேண்டும். சடலங்களை மீட்க வேண்டும். அபிநந்தன் போன்ற படகோட்டிகள், ஆற்றை வணங்கும் பக்தர்கள் அதை மாசுபடுத்தும் முரண்பாட்டை தினசரி பார்க்கின்றனர். யமுனையின் மாந்தர்களாக இருக்கும் இவர்கள், ஆற்றின் அழிவுக்கும் வாழ்வுக்கும் சாட்சியங்களாக நீர் முனையில் நிற்கின்றனர்.
தமிழில்: ராஜசங்கீதன்