1990களின் தொடக்கத்தில் சியூரி அருகே உள்ள கைவிடப்பட்ட குவாரியில் தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது என்று நினைவுகூருகிறார் காரியா கிராமத்தின் சந்தால் பள்ளி ஆசிரியரான பாபுர்ஜி கிஸ்கு. தண்ணீர் மறைந்த பிறகு அதன் அடியில் சுமார் 10 முதல் 15 கோணிப்பைகள் இருந்தன. அது ஒவ்வொன்றிலும் ஒரு மனித உடலின் எச்சம் இருந்தது. யாருக்கும் அந்த உடல்கள் யாருடையது என்று தெரியவில்லை ஆனால் அனைவரும் அது சந்தால்களுடையது என்று நினைத்தனர். மேற்பார்வையாளரால் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள், தங்கள் மனைவி அல்லது சகோதரி மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை எதிர்த்துப் போராடியதற்காகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆண்கள், அல்லது கனிம சுரங்களில் நடந்த விபத்துகளில் இறந்த வெளியூர் தொழிலாளர்கள் இங்கு வீசப்பட்டுள்ளனர். ஏனெனில் இந்த கனிம சுரங்க உரிமையாளர்கள் - அனைவரும் டிக்குஸ் சமூகத்தைச் சேந்த ஆண்கள் – இவர்கள் வெளிப்படையாக துப்பாக்கிகளை ஏந்திச் சென்று தங்களுக்கு காவல்துறை மற்றும் அரசியலில் நண்பர்கள் இருப்பதாக பெருமையடித்துக் கொள்கின்றனர். எனவே, இந்தக் கொலைகாரர்கள் மீது விசாரணை நடத்த வலுயுறுத்தி எவரும் தைரியமாக முன்வருவதில்லை. “தங்கள் கண் முன்னே தங்கள் சொந்த சகோதரிகள் வல்லுறவு செய்யப்பட்டதாகவும் அதை எதிர்த்துப் போராடினால் துப்பாக்கியை வைத்து மிரட்டப்பட்டதாகவும் பல ஆண்கள் என்னிடம் கூறியுள்ளனர்,” என்கிறார் கிஸ்கு.
இத்தகைய அட்டூழியங்கள் மேற்கு வங்கம் அல்லது இந்தியாவில் மட்டும் நடப்பதல்ல. உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினப் பகுதிகளில் அமைக்கப்படும் கனிமச் சுரங்கம் மற்றும் பிற வகையான தொழில்மயமாக்கல் என்பது பாலியல் வன்முறைகளுடன் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளது. ஐ.நா மன்றத்தின் சிறப்பு அறிக்கையாளர் ஜேம்ஸ் அனயா ஜனவரி மாதம் கூறியது: “இயற்கை வளங்களைப் பிரித்தெடுக்கும் திட்டங்களுக்காகப் பழங்குடியினச் சமூகங்கள் வாழும் பகுதிகளுக்குள் பணியாளர்கள் அனுப்பப்படுவதால் வல்லுறவு மற்றும் வன்முறை உட்பட பாலியல் தொல்லை மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாகப் பழங்குடியினப் பெண்கள் புகாரளித்துள்ளனர்.” அத்தகைய அத்துமீறல்கள் எய்ட்ஸ் நோய் பரவலுக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
1974ம் ஆண்டு முதன்முதலாகத் தான் சிங்பம் (இப்போது ஜார்க்கண்ட்டில் உள்ளது) வந்தபோது, “பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் வனப்பாதுகாவலர்களே. அப்படித் தான் இங்கு பலாத்காரக் கலாச்சாரம் தொடங்கியது. 1985 வரை ஆதிவாசி ஒருவரை வல்லுறவு செய்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை,” என்கிறார் தியாஸ். எந்திரமயமாக்கல் மூலம் கனிமச் சுரங்கங்கள் விரிவடைந்த பிறகு அதுவரை தொடாத இடங்களில் எல்லாம் சுரங்கங்கள் அமைந்த பின் நிலைமை மிகவும் மோசமானது. “2005 முதல் சரண்டா காட்டில் தினமும் சுமார் 2000 லாரிகள் அந்த வழியில் செயல்பட்டன,” என்று தொடரும் தியாஸ், “ஒவ்வொரு லாரியிலும் ஓர் ஓட்டுநர், ஒரு துப்புரவாளர் மற்றும் பிறர் இருந்தனர்,” என்கிறார். இதன் விளைவாக, அந்தப் பழங்குடியினப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான முண்டா, சந்தால் மற்றும் ஹோ பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர் அல்லது பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர் என்கிறார். இத்தகைய முறைகேடான செயல்பாட்டிற்கு நீண்ட வரலாறு உள்ளது. இதுவே மாநிலத்தின் முக்கிய எஃகு நகரங்களான ஜாம்ஷெட்பூர் மற்றும் நவோமுண்டி ஆகியவற்றில் “ஆசாத் பஸ்தி” அல்லது சுதந்திர சேரி உருவாகக் காரணம் என்கிறார்.
கொந்த் பழங்குடியைச் சேர்ந்த பல குடும்பங்கள் வாழ்ந்த லஞ்சிகர் பகுதியில், 2002ல் பிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா ரிசோர்சஸ் என்ற கனிமவள நிறுவனம் வருவதற்கு முன் “பாலியல் வன்முறை குறித்த சம்பவங்கள் நடந்ததே இல்லை,” என்கிறார் ஒடிசாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான சூர்யா ஷங்கர் தாஷ். அதற்கு முன்பு தான் கேள்விப்பட்ட பலாத்காரச் சம்பவங்கள் என்றால் 1990களில் – டோங்க்ரியா கொந்த் மேம்பாட்டு நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்த அரசு மானுடவியலாளர் ஒருவர் ஈடுபட்டதும், லஞ்சிகரில் செயல்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ஈடுபட்டதும் ஆகும். அலுமினிய சுத்திகரிப்பு நிலையத்தை வேதாந்தா கட்டத் தொடங்கிய பிறகு, “லாரி ஓட்டுநர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வேதாந்தா ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரால் உள்ளூர் சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டதாக கிராமவாசிகள் சொன்ன பல சம்பவங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். அப்படி வேதாந்தாவின் “ரவுடிகளால்” கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர் – சமூக செயற்பாட்டாளரின் 9 வயது மகள் – அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டார் என்கிறார் தாஷ். இன்று லஞ்சிகரில் நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என்கிறார் அந்த இயக்குநர்: அவர்கள் சுத்திகரிப்பு நிலையத்திற்காகத் தங்கள் சொந்த கிராமத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட பெண்கள், அல்லது வல்லுறவு செய்யப்பட்ட பெண்கள், அல்லது புலம்பெயர் தொழிலாளர்களால் மயக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட பெண்கள் ஆவர்.
தொடர்ந்து பெரிய பட்டியலையே சொல்கிறார் தாஷ். “கோராபுட்டில் உள்ள நால்கோ (NALCO) சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள தாமன்ஜோடியில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசி பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சுகிந்தாவின் க்ரோமைட் கனிமச் சுரங்கங்களில் சிறைப்படுத்தப்பட்ட பிர்ஹோர் சமூகத்தில் பதின்பருவச் சிறுமிகள் உட்பட அனைத்துப் பெண்களும் லாரி ஓட்டுநர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களுக்காக வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டாடா நிறுவனத்தின் ரவுடிகளால் கலிங்கா நகரின் அகதிகள் முகாம்களில் உள்ள அகதி சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகின்றனர். கலிங்கா நகரின் ஜிண்டால் தொழிற்சாலைக்கு எதிராக ஒரு விபச்சாரச் சேரியே உருவாகிக்கொண்டிருக்கிறது.”
தாஷின் கூற்றுபடி, கோராபுட் மாவட்டத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பரோஜா சமூகத்தின் நிலமானது 1980ல் கோலாப் நீர்தேக்கம் கட்டப்பட்டபோது மூழ்கிவிட்டது. தங்களுக்கே அதிலிருந்து வழங்கபட முடியாத காரணத்தால் மாவட்ட நிர்வாகத்தினர் பாரம்பரிய பெண்கள் தூங்கும் அறைக்கான இலவச அனுமதியைத் தங்களுக்கு வழங்கவில்லை எனில் சட்டப்பூர்வமாக ஒதுக்கப்படும் ரேஷன் பொருட்களை நிறுத்துவதாக மிரட்டியுள்ளனர். அவர்களது நோக்கம் உடலுறவு வைத்துக்கொள்வது. இந்தத் தூங்கும் அறைகளில் (ஆண்களுக்கென தனியான தூங்கும் அறைகள் உள்ளன) ஒரே கிராமத்தைச் சேர்ந்த வயதுவந்த பெண்கள் ஒன்றாக உறங்குவர். இது வேட்டை, ஒன்று கூடுதல், விளைச்சலை இடம் மாற்றுதல் ஆகியவற்றைச் செய்து வாழும் பழங்குடிகள் இடையே வழக்கமானது. இதைப் பழங்குடியின் அடுத்த தலைமுறையினருக்கு வழங்குவது என்ற “ஒரு நுட்பமான சமூகமயமாக்கல்” என விளக்கம் தருகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத மானுடவியலாளர். அங்கு இந்தப் பதின்பருவப் பெண்கள் தங்களைவிட வயதில் கொஞ்சம் பெரிய பெண்களிடம் பாடல் பாடுதல், நடனம், பயிர் விளைவித்தல், மூலிகைகளை மருத்துவப் பயன்பாட்டிற்கு உபயோகித்தல் (கருத்தடை உட்பட), தங்கள் காதலர்களுக்குக் கொடுக்கும் சீப்பு மற்றும் பிற பரிசுப் பொருட்களைச் செய்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்கின்றனர் என்ற மானுடவியலாளர் – “அதைக் கடந்தும் செல்வதுண்டு – அதாவது ஒருவருடன் ஒன்றாக உறங்கும்போதும் மற்றும் தனியாக உறங்கும்போதும்,” என்று விவரிக்கிறார். விழாக்களின்போது ஒவ்வொரு தூங்கும் அறையிலும் மற்ற கிராமங்களில் இருந்து வரும் திருமணமாகாத எதிர்பாலினத்தவர்கள் தங்க வைக்கப்படுவர். இவை, காதல் மற்றும் உடலுறவை நோக்கி இட்டுச் செல்கின்றன. இதைத் திருமணத்திற்கு முன்பான ஓர் ஆரோக்கியமான அறிமுகமாகப் பழங்குடியின ஆண்களும் பெண்களும் கருதுகின்றனர். இந்த நிகழ்வுகள் பழங்குடி இனத்தவர் இடையே ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான முக்கியமானவையாகும்.
இந்தப் பகுதிகளில் பணிக்கு வரும் டிக்குஸ் ஆண்கள் இந்தத் தங்குமிடங்களைக் கட்டுப்படுத்தப்படாத ஒழுக்கக்கேடான இடங்களாகப் பார்ப்பதால் உடலுறவுக்காக இந்த இடங்களுக்கு அத்துமீறி நுழைவர். இதன் விளைவாக இந்தத் தங்குமிடங்களை வலுக்கட்டாயமாக மூடும் நிலைக்குப் பழங்குடிகள் தள்ளப்பட்டனர். இதனால் தங்கள் இளைஞர்களுக்குக் காதல் உட்பட பழங்குடியினக் கலாச்சார முறைகளைப் பயிற்றுவிக்கும் நடைமுறை பறிபோனது.
மற்றுமொரு மோசமான நிகழ்வை 2008ம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கே.பி.கே சமாச்சார் என்ற காணொளி தயாரிப்பு நிறுவனத்தின் மஹாமத் அஷ்லாம் பதிவு செய்துள்ளார். காலாஹண்டி மாவட்டத்தில் ஒரு கலாச்சார நிகழ்வில் ஆதிவாசி ஆண் மற்றும் பெண் இளைஞர்கள் ஆடிப் பாடிக்கொண்டிருந்தபோது ஜீப்களில் வந்த கடத்தல்காரகள் அங்கிருந்த பெண்களை அத்துமீறி கடத்திச் சென்றனர். இது ஒருமுறை மட்டும் நடந்த சம்பவமல்ல. கடந்த வருடம் ஒடிசாவைச் சேர்ந்த ரோர்கேலாவில் உள்ள ஆதிவாசி மஹிலா சுரக்ஷா மண்டலின் லில்லி குஜுர் என்பவர் சி.ஜி. நெட் ஸ்வரா என்ற மொபைல் பத்திரிக்கை சேவை தெரிவித்த தகவலின்படி ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் மட்டும் 40000க்கும் அதிகமான ஆதிவாசிப் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 15000 பேர் தடயம் கூட இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட்டைச் சேர்ந்த கிளாட்சன் டங்டங் என்ற சமூக செயற்பாட்டாளர் டெல்லியில் மட்டும் சுமார் 5 லட்சம் ஆதிவாசி சிறுமிகள் மற்றும் பெண்கள் வீடுகளில் பணியாட்களாகவும் அதேவேளை பாலியல் தொழிலாளியாகவும் வேலை செய்வதாகக் குறிப்பிடுகிறார். பணியமர்த்தும் நிறுவனங்களில் இருந்து வரும் தரகர்கள் பழங்குடி கிராமங்களுக்குச் செல்வர். குறிப்பாக, கனிமச் சுரங்கங்களால் விவசாய வாழ்வாதாரங்கள் பாதித்த கிராமங்களுக்குச் சென்று நகரங்களில் வேலை வாங்கித் தருவதாகப் பொய் வாக்குறுதிகளைத் தந்து பெண்களைத் தந்திரமாக வசப்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஷார்ஹுல் மற்றும் கரம் ஆகிய ஆதிவாசித் திருவிழாக்களில் பெண்களைப் பிற தரகர்களிடமோ நேரடியாக வேலைக்கு எடுக்கும் ஆட்களிடமோ விற்பனை செய்வதற்கான ஏலத்தை இந்த நிறுவனங்கள் நடத்துவதாகச் சாடுகிறார் டங்டங். இப்படிக் கடத்தப்படும் பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகின்றனர். சிலர் கொலையும் செய்யப்படுகின்றனர். பிறர் கையில் குழந்தையுடன் ஊர் திரும்புகின்றனர் – அங்கு தங்கள் சொந்த சமூகங்களால் நிராகரிக்கப்படுகின்றனர். பலர் விவரம் தெரியாமல் காணாமல் போகின்றனர். சிம்டெகா மாவட்டத்தில் உள்ள “எனது கிராமத்திற்குச் சென்றபோது அங்கு பெண்களையே பார்க்க முடியவில்லை. அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்,” என்கிறார் டங்டங்.
சத்தீஸ்கரில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு அரசு படைகளுக்கும் மாவோயிஸ்ட் கொரில்லா படையினருக்கும் இடையே நடக்கும் ஆயுத மோதல்கள், கனிமச் சுரங்கங்கள் மற்றும் இடப்பெயர்வு ஆகியவற்றை மேலும் மோசமடையச் செய்துள்ளன. 2005 முதல் மாவோயிஸ்டுகளுடனான தொடர்பை ஆதிவாசிகள் துண்டிப்பதற்காக மத்திய ரிசர்வ் படை மற்றும் அரசு ஆதரவில் இயங்கும் சல்வா ஜூடும் படையினர் சேர்ந்து சுமார் 50,000 ஆதிவாசிகளை முகாம்களுக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளினர். மேலும் ஒரு லட்சம் பேர் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்குப் புலம்பெயர்ந்ததாகக் கணிக்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் நந்தினி சுந்தர். அரசாங்கத்தின் இந்தப் பிரதிநிதிகள் “மக்களைக் கொலை செய்கின்றனர் மற்றும் பெண்களைப் பிடித்தால் அவர்களைப் வல்லுறவு செய்கின்றனர். மேலும், முகாம்களில் உள்ள சிறுமிகளைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துகின்றனர்,” என்கிறார் சுந்தர். கனிமச் சுரங்கங்களுக்கு எதிரான போராட்டங்களைத் தடுப்பதற்காக வடக்கு பாஸ்டரில் உள்ள ராவ்காட் கனிமப் பகுதியில் தற்போது இருபத்தி இரண்டு சி.ஆர்.பி.எஃப் நிலையங்கள் உள்ளன. மேலும் தண்டேவாடாவில் ஒவ்வொரு 5 கிலோமீட்டருக்கும் அத்தகைய முகாம்களைப் பார்க்கலாம் என்கிறார் சுந்தர். இந்தப் பாதுகாப்பு மையங்கள் பொதுவாகப் பள்ளி வளாகங்கள் அமைந்திருக்கும் இடங்களுக்கு அருகே இருப்பதாலும் அங்கு தடையின்றி ஆண்கள் சுற்றி வருவதாலும் பள்ளிகளுக்குச் செல்லவே சிறுமிகள் அச்சமடைகின்றனர். காவல்துறை அல்லது ராணுவத்தினரை எதிர்கொள்ள பயந்து காட்டுக்குள் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 9,000 ஆதிவாசிப் பெண்கள் கடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ எண்ணிக்கை உள்ளதாக தெஹல்கா பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தாலும், உண்மையான எண்ணிக்கை அதைவிட பத்து மடங்கு அதிகமாக இருக்கும் எனச் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். சல்வா ஜூடும் படையால் நிகழ்த்தப்பட்ட 99 பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி 2011ல் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் அரசாங்கத்தால் கடந்த ஆண்டில் ஒரு முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்கிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ். ‘சட்டத்தைச் செயல்படுத்தக்கூடியவர்கள்’ இத்தகைய அட்டூழியங்களைச் சகித்துக்கொள்ளும் செயலை ஆய்வு செய்த இந்திய அரசின் செயல்பாட்டைக் கவனிப்பவர்கள், கனிமவளத் துறை ஆதிவாசிகளை அடிபணிய வைப்பதற்காக நிகழ்த்தும் மனித உரிமை மீறல்கள் மீது இந்திய அரசு அலட்சியமாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
“இளைஞர்களுக்குச் சேவையாற்ற வேண்டும், சுதந்திரமும் இன்பமும் வேறு எந்தவொரு பொருளைவிடவும் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். நட்புணர்வும் பரிவும் விருந்தோம்பலும் முதன்மை முக்கியத்துவம் பெற வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, மனித அன்பு – அதன் உடல் வெளிப்பாடு என்பது அழகானது, தூய்மையானது மற்றும் புனிதமானது” என்பதைக் கொண்டாடும் விதமாக கோட்டுல் அல்லது முரியா ஆதிவாசி சமூகத்தின் தங்குமிடங்கள் அமைந்ததாக அரை நூற்றாண்டிற்கு முன்பு மானுடவியலாளர் வெர்ரியர் எல்வின் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள அனைத்து கோட்டுல்களும் இப்போது அழிக்கப்பட்டுவிட்டன. மாறாக, டிக்குஸ் உலகால் ஏற்பட்டுள்ள பாலியல் சார்ந்த இடைவிடாத வெளிப்பாடுகள் மற்றும் பிற தீமைகளின் விளைவாக – “வன்முறை என்பது பாலியல் உறவுகளின் ஒருங்கிணைந்த பகுதி என்று ஒரு சில ஆபத்தான (ஆதிவாசி இளைஞர்கள்) கருதுகின்றனர்,” என்கிறார் தியாஸ்.
* * *
ஒவ்வொரு பூர்வகுடியும் தனது காலனியத்துவ முதலாளியின் இடத்தைப் பிடிக்க ஏங்குவர். அவரது படுக்கையில் உறங்கவும், முடிந்தால் அவரது மனைவியுடன் வாழவும் விரும்புவர் என்று பிரெஞ்சு-அல்ஜீரிய புரட்சியாளர் ஃபிரான்ட்ஸ் ஃபனான் எழுதினார். புல்லாங்குழல் வாசித்தல் மற்றும் கவிதைகள் எழுதுதல் என்ற ஆசைகள் இளம் சந்தால்களிடம் இருந்து நீங்கிவிட்டன. அதற்கு மாறாக ஒரு ‘வெற்றிகரமான’ ஆண் என்று டிக்குஸ் சமூகம் வரையறுத்த பண்புகளை அவன் விரும்புகிறான்: ஒரு குளிரூட்டப்பட்ட ஸ்கார்பியோ கார், முடியாவிட்டால் ஒரு மோட்டார் சைக்கிள், ஜீன்ஸ், கண்ணாடிகள், பிராண்டட் புகையிலைகள், வெளிநாட்டு மதுபானம், ஒரு ஃபேன்ஸியான மொபைல் ஃபோன் மற்றும் பெண்களை அவமதிக்கும் போக்கு. இவை அனைத்தும் அவனைச் சுற்றி கனிமச் சுரங்கங்களில் வேலை செய்யும் முதலாளிகள் மற்றும் மேலாளர்கள் வாழும் வாழ்க்கை முறையில் உள்ள கூறுகளால் அவனுக்கு ஏற்பட்ட தாக்கத்தின் விளைவுகளாகும். ஆனால், ஒரு குவாரி முதலாளி ஒரு நாளைக்கு பத்து லட்சம் வரை சம்பாதிப்பார். ஆனால் அவரின் ஊழியரோ நூறு முதல் முந்நூறு ரூபாய் வரை மட்டுமே சம்பாதிப்பார். எனவே, ஆதிவாசி ஆண்கள் தங்கள் புதிய விருப்பமான மலிவு விலை சாராயத்தைக் குடித்து திருப்தி அடைகின்றனர்.
தெப் மற்றும் பிறரின் கூற்றுபடி, ஒவ்வொரு குவாரியிலும் ஒவ்வொரு கிராமத்திலும் கள்ளச்சாராயக் கடைகள் அமைந்துள்ளன. பிர்பம்மில் உள்ள ஆண் தொழிலாளர்கள் தங்கள் தினசரி கூலியில் மூன்றில் ஒரு பங்கை அந்தக் கடைகளில் செலவழிக்கின்றனர். கடந்த காலங்களில் மதப் பண்டிகைக் காலங்கள் போது மட்டும் குடிப்பதற்காக மஹுவா மரங்களின் பூக்களில் இருந்து சிரத்தையுடன் மதுபானத்தைச் சந்தால்கள் தயாரித்தனர். இப்போது மலிவான வணிக மதுபானங்கள் எல்லா நேரமும் கிடைக்கிறது. குவாரிகளில் வேலை செய்வது உடலை மிகவும் வருத்துவதால் தினமும் மாலை குடிக்க நேர்வதாகப் பல ஆண்கள் வாதிடுகின்றனர். குடும்ப வன்முறைக்கு முக்கியக் காரணமாக இருப்பது குடி என்பது அனைவரும் அறிந்ததே. அதில் முதன்மையாக பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான். மேலும், இது தகுதிவாய்ந்த சந்தால் ஆண்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. இதனால் டிக்குஸ் ஆண்கள் மீது சந்தால் பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்பட துவங்கியது.
பழங்குடியினப் பெண்களுடனான தொடர்பை இழப்பது சந்தால் ஆண்களின் விரக்தியையும் சீற்றத்தையும் மேலும் அதிகரிக்கிறது. டிக்குஸ் ஆண்கள் மற்றும் ஆதிவாசி பெண்கள் இடையே அதிகரித்து வரும் உண்மையான “காதல்” திருமணங்களைத் தவிர சந்தால் மற்றும் ஜார்க்கண்ட்டில் உள்ள பல சந்தால் பெண்கள் பாலுறவுக்காக அல்லாமல் தங்களின் நிலங்களுக்காக வெளியாட்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். பிர்பம்மில் அமைந்துள்ள ஒட்டுமொத்த குவாரி நிலமும் ஒரு காலத்தில் சந்தால்களுக்குச் சொந்தமாக இருந்தது – ஆனால், இப்போது பெரும்பாலான குவாரிகள் வெளியாட்களுக்குச் சொந்தமாக உள்ளன. பழங்குடியின நிலங்களைப் பழங்குடி அல்லாதவர்களுக்கு விற்பது சட்ட விரோதமானது. எனவே, போலியான சந்தால் பெயர்களை வைத்துக்கொண்டோ சந்தால் பெண்களைக் கவர்ந்தோ நில உரிமையை டிக்குஸ் பெற்றனர். சந்தால் பெண்ணைக் காதலிப்பவன் அவளைத் திருமணம் செய்துகொள்வான் அல்லது நிரந்தரமாகத் துணைவியாக வைத்துக்கொள்வான். அதன் பிறகு, “அவளின் நிலத்தில் ஒரு குவாரி அமைக்கலாம் அல்லது அவள் பெயரில் ஒரு நிலத்தை வாங்கலாம்,” என்கிறார் தெப். இத்தகைய கூட்டணிகள் ஜார்க்கண்ட்டில் மிகவும் இயல்பானவை என்று குறிப்பிடும் டாடா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்சஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விர்ஜினியஸ் ஸாஸா, அதில் ஈடுபட்டுள்ள பெண்கள் “டிக்குஸ் சமூகத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக மட்டும் பார்க்கப்படாமல் பழங்குடிகளிடம் இருந்து பழங்குடிகள் அல்லாதவர்களுக்கு நிலத்தை கைமாற்றுவதற்கான இணைப்பாகவும் பார்க்கப்படுகின்றனர்,” என்கிறார்.
இதன் விளைவாக, தங்கள் நிலப்பகுதியில் குவாரிகள் விரிவடைவதால், தங்கள் பெண்கள் உட்பட, பாரம்பரிய வேலைகள், சுயாட்சி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றை சந்தால் ஆண்கள் இழப்பதை உணர்ந்தனர். அவர்களின் சீற்றத்திற்கு பலியாவது பெண்களே. கடந்த சில வருடங்களில், பிர்பம்மில் சந்தால் இளைஞர்கள் மூன்று சந்தால் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்: அதில் ஒருவர் வங்காளி டிக்குஸ் காதலனுடன் காணப்பட்டவர். மற்ற இருவர் டிக்குஸ் ஆண்களுடன் பேசியதாகச் சந்தேகிக்கப்பட்டவர்கள்.
மற்ற இருவரில் ஒருவரான நீம்பஹரி கிராமத்தைச் சேர்ந்த ஃபுல்மோனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது கதையைச் சொல்கிறார். 2010 கோடைகாலத்தில் அவரும் அவரது இரு தோழிகளும் நாவல் பழம் சாப்பிடுவதற்காக அருகிலுள்ள ஒரு காட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த தங்கள் கிராமத்தின் சந்தால் இளைஞர்கள், அவர்கள் தங்கள் காதலர்களைச் சந்திக்க ரகசியமாக வந்ததாகக் கூறி சிறைபிடித்துள்ளனர். அந்தச் சமூகத்தில் மிகவும் படித்தவர்களான அந்த ஆண்கள் தங்கள் மூவரையும் இரவு முழுவதும் வைத்துள்ளனர் என்கிறார் ஃபுல்மோனி. இதைத் தடுக்க முயன்ற அந்தப் பெண்களின் குடும்பத்தினர் மற்றும் மஜ்ஹியையும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள பல கிராமவாசிகளின் கூற்றுபடி, குவாரி உரிமையாளர்களிடம் பணம் பெறுகின்ற சந்தால் இளைஞர் தலைவரான ரொபீன் சோரன் திருமணமாகாத சந்தால் பெண்களிடமிருந்து மொபைல் ஃபோன்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அத்துடன் டிக்குஸ் ஆண்களுடன் அவர்கள் பிடிபட்டால் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்துள்ளார். இவர்களைச் சிறைபிடித்தவர்கள் ஃபுல்மோனியின் உறவினர்களிடம் சோரன் அங்கு வருவதாகவும், வந்து அந்தப் பெண்களை “முயற்சி” செய்யப்போவதாகவும் கூறியுள்ளனர்.
அடுத்த நாள் காலை இரு சக்கர வாகனங்களில் அச்சுறுத்தும் வகையில் பெரிய சந்தால் இளைஞர் பரிவாரத்துடன் சோரன் வந்தார். ஃபுல்மோனி மற்றும் பிறரின் கூற்றுபடி சோரன் தன் ஆட்களை அரை மனதுடன் கட்டுப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் ஃபுல்மோனி மற்றும் அவரது ஒரு தோழியை நிர்வாணப்படுத்தி (மற்றொரு தோழியை கிராமத்தினர் காப்பாற்றியுள்ளனர்) அடுத்த கிராமம் வரை ஊர்வலமாகக் கொண்டு சென்று மீண்டும் கொண்டு வந்துள்ளனர். ஃபுல்மோனி மிகவும் அதிர்ச்சியடைந்து பிறகு மயங்கியபோதும் தனது அந்தரங்க உறுப்புகள் மீது கை வைத்த “வெட்கம் கெட்ட” ஆண்களை நினைவிருப்பதாகக் கூறுகிறார். காவல்துறையிடம் அவர் புகாரளித்த நபர்களிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்கள் காரணமாக அந்தக் கிராமத்தில் இருந்தே அவர் சென்றுவிட்டார். அதுமட்டுமல்லாமல் தன்னை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாகக் கொண்டு சென்ற புகைப்படங்கள் மொபைல் ஃபோன்கள் மூலம் அனைவருக்கும் பகிரப்படுவதால் அந்தப் பகுதியில் வேலை தேடவே அவர் மிகவும் அவமானப்படுகிறார். ஃபுல்மோனி தற்போது காட்டுப் பகுதியில் இருந்து குங்கிலியம் இலைகளை எடுத்து வந்து தையல் இலை செய்து ஒரு இலை பத்து பைசா என விற்று வாழ்ந்து வருகிறார். “சூரியன் இருந்தால் எனக்கு உணவு நிச்சயம், இல்லையெனில் உணவு கிடையாது,” என்று நிதர்சனத்தைச் சொல்கிறார் அவர்.
நிர்வாணப்படுத்தி ஊர்வலம் கொண்டு செல்வது பிற இடங்களிலும் நடைபெறுகிறது. 2007ம் ஆண்டு அசாமின் குவகாத்தியில் அரசியலமைப்பு உரிமைகளுக்கான பேரணியில் கலந்துகொண்டதற்காக ஓர் இளம் ஆதிவாசி பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு நகரம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டார். அதற்கு முன்பு அவர்கள் மீது சந்தால்கள் குற்றம் இழைத்ததில்லை. பிர்பம்மில் நடந்த ஊர்வலங்கள் பெண்கள் மீதான ஆண்களின் சீற்றத்தின் வெளிப்பாட்டிற்கான உணர்ச்சிப் பிரதியாகவே அமைந்துள்ளன. அந்தப் பெண்களைப் பழங்குடியினத் துரோகிகளாகவே சோரன் சாடுகிறார். குறிப்பாக, சந்தால் ஆண்களுக்கு வங்காளி பெண்களுடன் பழகுவதற்கான வாய்ப்பும் இல்லை – அதேவேளை தங்கள் சமூகத்தில் உள்ள பெண்களைப் கரம்பிடிக்கலாம் என்ற சிறிய நம்பிக்கை இருக்கும்போது அப்பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். 19ம் நூற்றாண்டின் கூலி வர்த்தகம் குறித்த ஒரு திடுக்கிடும் தகவல் மூலம், இத்தகைய சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது தெரிய வருகிறது. இந்தியாவில் இருந்து கயானா சென்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் பற்றி 1871ம் ஆண்டு வெளியான ஓர் அதிகாரப்பூர்வ ஆய்வின்படி ஒவ்வொரு ஐந்து ஆண்களுக்கும் இரண்டு பெண் கூலிகளே இருந்துள்ளனர். இதனால் இந்தியாவில் நடந்ததைவிட 90 மடங்கு அதிகமாக பாலியல் பொறாமை சார்ந்த கொலைகள் நடந்துள்ளன – அத்துடன் பெரும்பாலான கூலிகள் இந்தியாவில் இருந்து வந்த இரண்டு மாவட்டங்களைவிட 142 மடங்கு அதிகமாக இத்தகைய கொலைகள் நடந்துள்ளன. கொல்லப்பட்ட பெரும்பாலானோர் பெண்களே.
இந்தக் கூலிகளுக்குத் தங்கள் குடும்பத்தினர், சமூகத்தினர் மற்றும் கலாச்சாரத்தில் இருந்து மோசமான உறவு முறிவு ஏற்பட்டுள்ளது. எல்லாச் கலாச்சாரங்களிலும் நிகழும் மாற்றங்கள் பற்றி விளக்கும்போது வெங்கடேஸ்வர், “இத்தகைய மாற்றங்கள் மீது தங்களின் கட்டுப்பாடு இல்லாதவர்கள் அவற்றை எதிர்கொள்ளும் நிலை இருக்கிறது. பெண்களே வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். ஏனெனில் அவர்களே தொலைந்துபோனவற்றைப் பாதுகாக்க வேண்டிய அடையாளங்களாக உள்ளனர். பெண்களே தங்கள் சந்ததிகளைத் தாங்குபவர்களாக இருப்பது மட்டுமல்லாமல் அவர்களே எதிர்காலத்திற்கான நம்பிக்கையாகவும் உள்ளனர். எனவே, அவர்களின் இழப்பு அந்தச் சமூகத்தின் எதிர்காலத்திற்கான இழப்பாகவே பார்க்கப்படுகிறது,” என்கிறார்.
எதிர்பாராத விதமாக அமெரிக்காவின் தேசிய பொது வானொலி சேவையும் இந்த நிர்வாண ஊர்வலம் “கிராமத்தின் பெரியவர்கள்” உத்தரவில் நடந்ததாக விவரித்துள்ளது. ஆனால், 2012 செப்டம்பரில் அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மஜ்ஹிஸ் ஒரு சபையில் ஒன்றுகூடி சோரனின் கும்பலால் நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவத்திலும் பிற முறைகேடான விஷயங்களிலும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆதாரங்களைப் பெற்றனர். சிறிய சபைகளைக் கவனித்துள்ள பதெல், “ஜனநாயகத்தின் பணிக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இவை உள்ளன. ஆண்கள் பெண்கள் என இதில் அனைவரும் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைவர் பேசுவதும் நல்ல ஒத்திசைவுடன் உள்ளது. மற்றும் ஒருவர் பேசும்போது மற்ற அனைவரும் அமைதியாக அவரைக் கவனிக்கின்றனர்,” என்கிறார். சோரன் உட்பட குற்றம் இழைந்தவர்கள் அனைவரையும் பழங்குடியினச் சமூகத்தில் இருந்து சபை விலக்கி வைத்துவிட்டது. சுபல்பூரில் நடந்த பிமலா வழக்கின் விளைவாக பழங்குடி நிர்வாக முறையை சட்டவிரோதமானது என்று முதலமைச்சர் பானர்ஜி சமீபத்தில் அறிவித்ததை எதிர்க்கும் விதமாக பி.ஜே.எம்.எம் என்ற பெயரில் தற்போது இயங்கி வரும் சந்தால் மஜ்ஹிகள் ஒருங்கிணைத்த பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தீங்கு விளைவிக்கும் நவீனத்துவத்தின் அறிகுறியாக உள்ள பாலியல் வன்முறை போன்ற பண்புகளில் இருந்து தங்கள் பழங்குடிகளின் கலாச்சாரத்தையும் ஒருமைப்பாட்டையும் மீட்பதற்கான ஒரே வழியாக அவர்கள் பார்ப்பது, முன்பு அவர்கள் அனுபவித்து வந்த உண்மையான சுயநிர்வாகத்தை மீட்டெடுப்பதாகும்.
நாடு முழுவதிலும் முற்றுகையிடப்பட்டுள்ள ஆதிவாசிகள், தங்கள் சமூகங்கள் சிதைக்கப்படுவதைக் குறைப்பதற்கான ஒரே வழியாகக் கருதுவது, வெளியுலகத்தினரின் உள்நுழைவை எதிர்த்துப் போராடுவதாகும். ஒடிசாவின் நியாம்கிரியில் உள்ள டோங்க்ரியா கொந்த் மற்றும், கடந்த ஆண்டு மலையின் அடிவாரத்தில் உள்ள லஞ்சிகரின் ஆதிவாசி கலாச்சாரம் சிதைக்கப்பட்டது ஆகியவை மலை உச்சியில் இருந்து கனிமங்களை எடுக்கும் வேதாந்தாவை நிறுத்துவதற்கான தங்களின் ஒருமித்த முடிவுகளுக்கான காரணமாக அமைந்தது. டோங்க்ரியா ஆண் ஒருவர் பத்திரிகையாளர் அமிதாப் பத்ராவிடம் சொன்ன தகவலின்படி அரசாங்கமும் நிறுவனமும் அனுப்பிய ஆட்கள் “எங்களை அடித்தனர் மற்றும் எங்களின் நீளமான தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றனர். எங்கள் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்தனர். எங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளைத் தாக்கினர். எங்கள் வழிபாட்டுத் தளங்களுக்குள் காலணிகளுடன் நுழைந்து எங்கள் கடவுள்களை இழிவுபடுத்தினர் மற்றும் எங்கள் விலை மதிப்பு மிக்க பொருட்களைத் திருடிச் சென்றனர். படித்தவர்கள் இப்படியா நடந்துகொள்வார்கள்?” என்பதாகும்.
நாடு முழுவதும் உள்ள ஆதிவாசிகளிடம் கேட்டால், “ஆம்” என்பதே அவர்களின் அழுத்தமான பதிலாக உள்ளது.
சுபல்பூரில் நடந்த சம்பவத்தைப் பல நாளிதழ்கள் மத்திய கால காட்டுமிராண்டித்தனம் என்று விவரித்தது மஜ்ஹி தலைவர் ஹெம்ப்ரோமைப் புண்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், பெரும்பான்மை சமூகம் முழுமையாக ஏற்காத பெண்களின் உரிமைகள் சிலவற்றை சந்தால் கலாச்சாரம் ஏற்கிறது என்று குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக, 19ம் நூற்றாண்ட்டின் சமூக சீர்திருத்தவாதியான ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், சந்தால் கிராமத்தில் உள்ள ஒரே வங்காள குடும்பத்தில் பிறந்தவராவார். அங்கு விதவைத் திருமண முறையைப் பார்த்த அவர் இந்து சமுதாயத்திலும் அதைப் பரப்பினார். இந்த யோசனை தனக்கு எங்கிருந்து வந்தது என்பதை வித்யாசாகர் ஒருபோதும் மறைத்ததில்லை என்கிறார் ஹெம்ப்ரோம். ஏனெனில் டிக்குஸ் உலகம் ஆதிவாசிகளைக் காட்டுமிராண்டிகளாகப் பார்ப்பதால் அந்த வழக்கத்தை மறுப்பதற்கு இதுவே ஒரு காரணமாகவும் காட்டப்படும் என்கிறார். “சுபல்பூரில் என்ன நடந்திருந்தாலும் அது மத்திய காலக் காட்டுமிராண்டித்தனம் அல்ல. ஆனால், அதுவொரு நவீனக் காலக் காட்டுமிராண்டித்தனம்,” என்று முடிக்கிறார் ஹெம்ப்ரோம்.
காலந்தோறும் பின் தங்கிய சமூகம் தனது பெண்களை நடத்தும் விதமே நாகரிகப்படுத்துவதற்கான காரணியாகப் சொல்லப்படுகிறது. மரபு சார்ந்த உதாரணமாகச் சதி வழக்கத்தைச் சொல்லலாம். இதை 19ம் நூற்றாண்டில் வந்த பிரிட்டிஷ் வெளியீடுகள் வன்முறையானது என்று சித்திரங்களுடன் விளக்கினர். ஒரு நூற்றாண்டிற்குப் பின், 1927ல் வெளியான மதர் இந்தியா (Mother India) நூலுக்கான ஆராய்ச்சிக்கு பிரிட்டிஷ் உளவுத்துறை நிதியுதவி அளித்தது. விற்பனையில் களை கட்டிய அந்தப் புத்தகம் இந்து ஆண்களை சிறார் மீது பாலியல் நாட்டம் கொண்டவர்கள் என்று விவரித்தது. இந்த இரு பிரச்சாரங்களும் சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இருந்தாலும், அவற்றின் உள் நோக்கம் பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாப்பது அல்ல, ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதாகும். வரி வசூலிப்பதற்காக நிலச்சட்டங்களில் பிரிட்டிஷ் ஏற்படுத்திய மாற்றங்களால் சதி நடைமுறை தீவிரமடைந்தது என்கின்றனர் வரலாற்றாளர்கள்: அதாவது விதவைகள் வசமிருந்த நிலங்களுக்காக அவர்களைக் கொலை செய்வது திடீரென லாபகரமானதாகப் பார்க்கப்பட்டது. நோய் மோசமடைய காரணமான – காலனி ஆதிக்கமே – அதற்கான மருந்தாகவும் போற்றப்பட்டது.
சுபல்பூர் சம்பவம் தொடர்பாகத் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் தவறுதலாக வெளியான முக்கியமான செய்திகள் மூலம் இந்தியாவின் பழங்குடியினச் சபைகள் காட்டுமிராண்டித்தனமானவை என உண்மைக்குப் புறம்பாகச் சித்தரிக்கப்பட்டதும் இத்தகைய நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்று பதெலும் மற்றவர்களும் சந்தேகப்படுகின்றனர். இந்தியாவில் ஆதிவாசிகளின் எதிர்ப்பால் பல்லாயிரம் அல்லது லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மேலும் பல கனிம சுரங்க முதலீடுகள் தடைபடுகின்றன. கடந்த வருடம் டோங்க்ரியா கொந்த் சபைகள் எடுத்த முடிவால் நியாம்கிரியில் தாது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான வேதாந்தாவின் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு பாதித்தது. ஒரு பழங்குடியினச் சபையின் உத்தரவால் ஒரு கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் நடந்ததாகச் சித்தரிக்கப்படுவதை எந்தவித விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொள்வதும் – அதேவேளையில் முன்னேற்றம் என்ற பெயரில் ஆதிவாசிச் சமூகம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் நவகாலனியத்தை வளர்க்க உதவலாம்: முன்னேற்றத்திற்குத் தடங்கலாக இருக்கும் இந்தக் கிராமச் சபைகளைத் தடை செய்வதற்கும் டிக்குஸின் லாபத்திற்காக ஆதிவாசி நிலத்தைக் கையகப்படுத்துவதற்கும் இந்த வழக்கு பயன்படுத்தப்படுகிறது.
இக்கட்டுரை முதலில் Grist Media-வில் பிரசுரிக்கப்பட்டது