“இரவு நேரங்களில் பயிர்களில் தண்ணீர் பாய்ச்ச என்னைப் போன்று இன்னும் 5 சிறுவர்கள் இருந்தனர். அது பெரிய பண்ணை என்பதால் அனைவரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். எல்லா சிறுவர்களும் வேலை செய்தனர். கிராமத்தில் சில சிறுவர்களின் தந்தைகள் சவரத்தொழிலாளியாக இருந்தனர். பள்ளி நேரம் போக மிச்ச நேரத்தில் அவர்கள் தந்தையின் கடையில் வேலை செய்தனர். நாங்கள் எங்கள் தந்தைகளுக்காக வயல்களில் வேலை செய்தது போல.”
வசிர் 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். “நான் பொதுத் தேர்வு எழுதினேன். ஆனால் தேர்ச்சிப் பெறவில்லை. வேலை செய்து பணம் சம்பாதிக்க அதுவே எனக்கு நேரம். ஆனால் கிராமத்தில் வேலை இல்லை. அது 1994 அல்லது 1995 காலகட்டம்,” என்றார் வசிர்.
“எனவே நான் டெல்லியில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றேன். அவர் என் உடன் பிறந்த சகோதரர் கிடையாது, அத்தையின் மகன். அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.”
வசிர், உறவினர் என்பதால் அந்த ஐஏஎஸ் அதிகாரி ஏதேனும் நல்ல வேலை வாங்கித் தந்தாரா?
“இல்லை. நான் அவரது வீட்டில் வேலை செய்தேன். சமையல், வீட்டை சுத்தம் செய்தல், கூட்டுதல், தரையை துடைத்தல், பாத்திரங்கள் கழுவுதல், துணிகளை துவைத்தல், அவ்வப்போது கார் கழுவுதல் வரை அனைத்து வேலைகளையும் செய்தேன்.”
நல்ல சம்பளம் கிடைத்ததா? வசிருக்கு எவ்வளவு கிடைத்தது?
“அதிக பணமெல்லாம் கிடைக்கவில்லை. நான் கிராமத்தில் சம்பாதித்த அளவு தான் கிடைத்தது. ஆனால் என் உறவினர் மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டார். எனக்கு தங்க அறை கொடுத்தனர், தினமும் உணவு கிடைத்தது. எனவே மாதம் ஐநூறு ரூபாய் என்பது அப்போது பரவாயில்லை என தோன்றியது. கொஞ்சம் பணத்தை நான் வீட்டிற்கும் அனுப்பினேன்.“
“ஒரு வருடம் வேலை செய்த பிறகு, எனக்கான வாழ்க்கை இது அல்ல என நான் நினைத்தேன். மொத்த வாழ்க்கையும் இந்த வேலைதான் என்றாகி விடும். இதை தொடர முடியாது. எனவே அவரது கார் ஓட்டப் பழகினேன். அவரும் இதற்கு என்னை அனுமதித்தார்.“