உற்சாகத்துடன் இருக்கும் பயணிகளை, குல்மார்கின் பனிச்சரிவுகளில் சறுக்கு வண்டியில் கொண்டு செல்வதற்கு தயாராக இருந்தார் அப்துல் வகாப் தோகெர். ஆனால் ஜனவரி 14, 2024 அன்று, மனம் நொடிந்து போன தோகெர், அவரின் வண்டி மீதமர்ந்து, பொட்டலாக கிடக்கும் பழுப்பு நிற நிலப்பரப்பை பார்த்துக் கொண்டிருந்தார்.
“குளிர்காலத்தின் உச்சமான இந்த நேரத்தில் குல்மார்கில் பனி இல்லாமல் இருக்கிறது,” என்கிறார் அவர் குழப்பத்துடன். அவருக்கு வயது 43. 25 வருடங்களாக சறுக்கு வண்டிகள் இழுக்கும் வேலை செய்யும் அவர் இப்படியொரு நிலையை பார்த்திருக்கவில்லை. பதட்டத்தில் அவர், “இதே நிலை தொடர்ந்தால், சீக்கிரமே நாங்கள் கடனாளியாகி விடுவோம்,” என்கிறார்.
பனி போர்த்திய குல்மார்கின் மலைகள், ஜம்மு காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்திலுள்ள பிரபலமான மலை வாசஸ்தலமாகும். உலகளவில் கோடிக்கணக்கான பேர் சுற்றுலாவாசிகளாக வருடந்தோறும் இங்கு வருகின்றனர். 2,000 பேர் (2011 கணக்கெடுப்பு) வசிக்கும் ஊரின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய அங்கம் வகிக்கிறது. தோகெர் போன்ற பிறரும் வேலைக்காக இங்கு பயணித்து வருகின்றனர்.
பராமுல்லாவின் கிராமமான கலாந்தராவில் வசிக்கும் அவர், அன்றாடம் வேலை கிடைக்கும் நம்பிக்கையில், 30 கிலோமீட்டர் உள்ளூர் போக்குவரத்தில் பயணித்து குல்மார்குக்கு வருகிறார். “ஒருவேளை வாடிக்கையாளர் கிடைத்தாலும் கூட, பனி இல்லாததால் 150-200 ரூபாய்தான் என்னால் ஈட்ட முடியும்,” என்கிறார் அவர். “அதிகபட்சமாக நாங்கள் உறைந்த நீரின் மேல் வாடிக்கையாளர்களை ஓட்டி செல்ல முடியும்.”
“குளிர்காலத்தில் குல்மார்க் ‘அற்புதமான அனுபவத்’தை தரும்,” என்கிறது ஜம்மு காஷ்மீரின் அதிகாரப்பூர்வ இணையதளம். “சறுக்க விரும்பும் எவருக்கும் சொர்க்கமாக பனியால் போர்த்தப்பட்ட பகுதி இருக்கும். இங்குள்ள பனிச்சரிவுகள் அப்பழுக்கற்றவை. அற்புதமாக சறுக்கி செல்பவர்களுக்கும் சவால் விடுக்கக் கூடியவை!”













