அது ஒரு கோடை நாளின் அலுப்பு நிறைந்த பிற்பகல் பொழுது. 80 வயதுகளில் இருக்கும் என்பாட்டி குசும் வங்குண்ட்ரே, அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து ஒரு தோரனை (கதவு திரைச்சீலை) பின்னிக் கொண்டிருக்கிறார். கல்லூரி விடுமுறையை வீட்டிலிருந்து கழித்துக் கொண்டிருந்தேன் நான். வெளியே கடும் வெயில். பத்தாண்டுகளின் உச்சமாக மும்பையில் 39.7 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. மதிய உணவுக்கு பிறகு தூக்கக் கலக்கத்துடன் இருந்த நான், பாட்டியுடன் நடந்த அவரது நினைவுகளை கேட்டுக் கொண்டிருந்தேன்.
“மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்திலுள்ள வட்காவோனில் நான் பிறந்தேன். 33 வகை கடவுளர் கொண்ட பழைய ஜெய்ராம் சாமி கோவில் ஒன்று இருந்தது. நான் படித்த பள்ளி, கோவில் வளாகத்தில்தான் கூடும். விளையாடவும் அங்கு நிறைய இடம் இருக்கும். வகுப்புகள் முடிந்த பிறகு, ஹுதுஹுது, கபடி, லங்க்டி விளையாடுவோம். நாக பஞ்சமி விழாவில் சில சிறுமிகள் ஃபுகாதி(நாட்டுப்புற நடனம்) ஆடிப் பாடுவார்கள். என் நான்கு தங்கைகளும் நானும் சந்தோஷமாக இருப்போம்.
”பள்ளியில் 7ம் வகுப்பு வரைதான் இருந்தது. அதற்குப் பிறகு நான் தையல் மற்றும் பின்னுதல் கற்றுக் கொண்டேன். விவசாயத்திலும் உதவினேன். என் தந்தைக்கு நிலம் இருந்தது. விவசாய நிலம் இருந்தாலும் அவர் மும்பையில் வேலை பார்த்தார். ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்தார். எங்களின் குடும்பம் கிராமத்தில் வசித்தது. நிலம் எங்களுக்கு சொந்தமானது. இப்போதும் இருக்கிறது. என் சகோதரர் அதை பார்த்துக் கொள்கிறார். மூன்று ஏக்கர் இருக்கிறது. அந்த காலத்தில் என் தந்தை, அவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என எட்டு பேர் மொத்தமாக நிலத்தின் உரிமை வைத்திருந்தனர். அப்போது 23-24 ஏக்கர் நிலம் இருந்தது.
“அந்த எட்டு உரிமையாளர்களும் இரண்டு மராத்தா தொழிலாளர்களை கூலிக்கு வைத்து தானியம், நிலக்கடலை, பாசிப்பயறு விதைப்பார்கள். நாங்கள் நிலக்கடலை அறுவை செய்வோம். கொண்டைக்கடலை பறிப்போம். கத்தரிக்காய், முருங்கைக்காய் போன்ற காய்கறிகள் வளர்ந்ததும் சேகரிப்போம். இவை எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த எனக்கு 20 வயது ஆனதை கூட நான் கவனித்திருக்கவில்லை.
“விரைவில் திருமண பேச்சுவார்த்தை தொடங்கியது. மும்பையிலிருந்து ஒரு வரன் வந்தது. திருமணம் முடிவானது. 1965ம் ஆண்டில் நாங்கள் மும்பைக்கு சென்றோம். நான், என் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் அனைவரும் சென்றோம். வட்காவோனிலிருந்து ரஹ்மத்பூருக்கு பேருந்திலும் அங்கிருந்து மும்பைக்கு இரவு ரயிலிலும் சென்றோம்.
”ஊரை விட்டு வெளியே சென்றது அதுவே முதல்முறை. மும்பைக்கும் அதுவே முதல்முறை. பெருநகரத்தின் கூட்டத்தை பார்த்து வியப்பாக இருந்தது. இரண்டாம் நாளில் அங்கு மணம் முடித்து, அந்தேரியிலுள்ள கணவரின் பெற்றோரது வீட்டுக்கு சென்றேன். என் கணவர் கர்நாடகாவை சேர்ந்தவர். வாகன நிறுவனத்தில் லைன்மேனாக அவர் வேலை பார்த்தார். தாலி செய்து நகை வேலை தொடங்கினேன். இப்படித்தான் எங்களின் மண வாழ்க்கை தொடங்கியது. இரண்டு மகன்கள், ஒரு மகள். இப்போது இரண்டு பேத்திகள், இரண்டு பேரன்கள்.”
என்னுடைய பாட்டியிடம் நான் கேட்டேன்: “நீங்களும் மும்பைக்கு வெளியில்தான் இருந்தீர்கள் இல்லையா?”
”கன்யாகுமரி, கல்கத்தா, ஜெய்ப்பூர், காசி, காஷ்மீர். உன் தாத்தாவோடு சிங்கப்பூர் மற்றும் நேபாளத்துக்கும் சென்றிருக்கிறேன்.”
எது உங்களுக்கு பிடித்த பயணம்?
“மும்பை வந்து 30 வருடங்களுக்கு பிறகு, என் தாய் மற்றும் சகோதரியுடன் நான் சென்ற காசிதான் எனக்கு பிடித்த பயணம். பயணித்த அனைவருமே பெண்கள். என் மைத்துனி இதுபோல அடிக்கடி செல்வதுண்டு. எனக்கு அப்பயணத்தில் இணைய விருப்பம் இருக்கிறதா எனக் கேட்டார். நானும் ஒப்புக் கொண்டேன்.”
தாத்தா என்ன சொன்னார்? உங்களுக்கு பயமாக இல்லையா? என்னிடம் கேள்விகள் இருந்தன. பாட்டி சொல்லிக் கொண்டிருந்த கதை திடீரென எனக்குள் உற்சாகத்தை உருவாக்கி விட்டது. சமைத்து, தையல் செய்து, குடும்பத்துக்கு வேலை பார்த்த மென்மையான, கனிவு நிறைந்த ஒரு முதியப் பெண்ணாகதான் அவரை இத்தனை காலமும் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது, தாய் மற்றும் மூன்று சகோதரிகளுடன் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சாகசம் நிகழ்த்திய, தைரியம் நிறைந்த பெண்ணாக அவர் தெரிந்தார். நிறைய தெரிந்து கொள்ள விரும்பினேன்.
“ஒன்றும் சொல்லவில்லை. என் கணவர் போக சொன்னார். அவரின் சகோதரியும் உடன் வருவதால் சொன்னார். அது பெண்கள் மட்டும் இருந்த பயணம். எனவே கணவர் வர முடியவில்லை. நான் போக விரும்பினேன். அச்சமோ பதற்றமோ இல்லை. பயணத்துக்கு ஏன் பயப்பட வேண்டும்?”
”எனக்கு அப்போது 50 வயது. ஷலான் (சகோதரி) இரு வயது இளையவள். என் தாய்க்கு 72 வயது இருக்க வேண்டும். முன்பெல்லாம் மக்கள் உறுதியோடும் வலுவோடும் இருந்தனர். இப்போது நாங்கள் அப்படி இல்லை. என் தாய் வலிமையுடன் இருந்தார். இறுதி வரை அவர் நடந்தார். 15 நாட்களுக்கு மேல் பேருந்தை வாடகைக்கு எடுத்தோம். பேருந்தில் 45 பேர் இருந்தோம். என் இரு மகன்கள் 4,000 ரூபாய் கொடுத்தனர். நாங்கள் காசி, உஜ்ஜெயின், மதுரா மற்றும் 27 வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றோம்…”
கண்கள் விரிய இன்னொரு பாட்டி கதைக்கு நான் தயாராக இருந்தேன்…


