இந்தக் கட்டுரை, புலிட்சர் மையத்தின் ஆதரவுடன் பார்த் எம். என். வழங்கும் தொடரின் ஒரு பகுதியாகும்.
உறவினர் ஒருவர் அமோல் கண்டேகருக்கு அனுப்பிய ஒரு யூட்யூப் சேனல் சுட்டியால் மாத வருமானத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக செலவானது. இத்தனைக்கும் அது இணைய மோசடி கூட இல்லை.
வாழ்க்கையை கஷ்டப்பட்டு சமாளித்து வந்த 35 வயது தொழிலாளி, அந்த சுட்டியைப் பார்த்துவிட்டு அதிகாலை பேருந்தில் ஏறினார். தலையில் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்ட அவரது 11 வயது மகனும், மூட்டு வலியால் அவதிப்படும் அவரது தாயும் உடன் சென்றனர். பழுதடைந்த அரசுப் பேருந்தின் ஒன்பது மணி நேரப் பயணம், அவரது மூட்டுகளை மேலும் வீங்கச் செய்தது. ஆனால் அது பயனுள்ளதாகவே அமையப்போகிறது. உடல்நலம் பற்றிய அவர்களது கவலைகளுக்கான பதில், அந்த யூட்யூப் சேனலில் உள்ளதாக அமோலின் உறவினர் உறுதியளித்திருந்தார்.
நெற்றியில் வெள்ளைச் சுண்ணாம்பை பூசிக்கொண்டு, தாடியுடன் இருக்கும் ஒரு 'கடவுள் மனிதர்' ஆயிரக்கணக்கானோரை நோக்கிப் பேசும் தொடர் காணொளிகளை அந்த சேனல் வெளியிட்டது. குடும்பப் பிரச்சனைகள், குடிப்பழக்கம், தொழில்ரீதியான தடங்கல்கள், புற்றுநோய், மனநலப் பிரச்சனைகள், காதல் வாழ்க்கை என ராஜேந்திர கட்கே 'மகாராஜ்' எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வைக் கொண்டிருந்தார்.
விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் புராணகாலத் துறவியான தத்தரிடம் கட்கே 12 வருட ஆன்மீகப் பயிற்சி முடித்துள்ளதாக, அவரது சேனலில் போடப்படிருந்தது. "அவரது ஆன்மீக அர்ப்பணிப்பை கண்டு, , தத்தகுரு கட்கே மகாராஜை ஆசீர்வதித்தார்," என்றும் அதில் போடப்படிருந்தது. அன்று முதல், "அவர் மருந்து மற்றும் பிரார்த்தனைகளின் உதவியுடன், தனது யாத்ரீகர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வருகிறார்."
'தத்தாதாம் சர்க்கார் சங்கமனேர்' என்ற அந்த யூட்யூப் சேனலுக்கு 183,000 சந்தாதாரர்கள் இருப்பதையும், ஒவ்வொரு காணொளியின் கீழும் உற்சாகமான கருத்துகள் இருப்பதையும் கண்ட அமோல், "அவர் ஏதோ மாயம் செய்கிறார்" என்று நினைத்துள்ளார்.










