ஆடுகள், செம்மறி ஆடுகள், கோழிக்கறி, எருமை, கிழங்குகள், இலைகள், பழங்கள்- இவை அனைத்தும் நியாம்கிரி ஆண்டு திருவிழாவில் ஏராளமாக கிடைக்கின்றன. தென்மேற்கு ஒடிசாவின் காலஹந்தி, ராயகடா மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடிகள் இங்கு பெருமளவு கூடியுள்ளனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 22 முதல் 25 வரை, அறுவடை முடிந்தவுடன், டோங்கிரியா கோந்து பழங்குடியினர் நியாம் ராஜாவை வழிபட தயாராகிறார்கள். காடுகள் சூழ்ந்த நியாம்கிரி மலைகளால் அவர்களின் மன்னர் பிரதிநிதித்துவம் பெறுகிறார். ஆண்டுதோறும் நியாம்கிரி திருவிழா நடைபெறும் காலம் இது, "எங்கள் உலகில் எந்த அரசும் இருக்கவில்லை... டோங்கிரியாக்கள் [மட்டும்] இங்கே இருந்தனர்" என்று லோடோ சிகோகா கூறுகிறார். "தனது மக்கள் "மகிழ்ச்சியாகவும், சுதந்திரத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்க்கையை அனுபவித்து, தாய்மொழியில் பேசிக்கொண்டிருந்த காலம் அது" என்று கூறுகிறார். நீரோடைகள் கொண்ட அடர்ந்த காடுகளில் வனவிலங்குகள் நிறைந்திருந்தன. சிகோகா ஒரு டோங்கிரியா கோந்து ஆவார். பாக்சைட் சுரங்கத்திலிருந்து, பழங்குடிகளையும், மலைகளையும் பாதுகாக்க 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நியாம்கிரி சுரக்ஷா சமிதியின் தலைவர் அவர். (‘The mountain, forest and streams are our gods’ காண்க)
“இயற்கை, சுற்றுச்சூழலை தவிர வேறு எந்த தெய்வத்தையும் பழங்குடிகள் வணங்குவதில்லை,” என்கிறார் சமிதியின் ஒருங்கிணைப்பாளரும் காலஹந்தி மாவட்டம் கேசிங்காவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் லிங்ராஜ் ஆசாத். "குய் மொழியில், அவர்கள் பூமி தெய்வமான 'தர்னி பெனு'வைப் பற்றி பேசுகிறார்கள், 'ஹோரு' என்ற மலையை அவர்கள் தெய்வ தந்தையாகக் கருதுகிறார்கள். நீர், காடு, மரம், காற்று ஆகியவையும் வாழ்வின் அடித்தளமாகக் கருதப்பட்டு, வணங்கப்படுகின்றன. அதனால்தான் நியாம்கிரி மலை சுரங்கத்தை வேதாந்தாவிடம் ஒப்படைக்க [அரசு] முன்மொழிந்தபோது நாங்கள் எதிர்த்தோம்."
அரசுக்கு சொந்தமான ஒடிசா சுரங்க நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனமான ஸ்டெர்லைட் தொழிற்சாலைகள் (இப்போது வேதாந்தா) ஆகியவை முன்வைத்த திட்டத்தை டோங்கிரியா பழங்குடிகள் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர். மாநிலத்தின் லஞ்சிகர் தாலுகாவில் உள்ள வேதாந்தாவின் சுத்திகரிப்பு ஆலைக்கு பாக்சைட் எடுக்க (அலுமினியம் தயாரிக்க பயன்படுகிறது) அவர்களின் புனித மலைகளை சுரங்கப்படுத்த இந்த திட்டம் முன்மொழியப்பட்டது. உச்சநீதிமன்றம் 2013ஆம் ஆண்டு அளித்த உத்தரவுப்படி நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், டோங்கிரியா கோந்து மற்றும் பிற பழங்குடி குழுக்களைச் சேர்ந்த 12 கிராம சபைகள் எந்தவொரு சுரங்க நடவடிக்கைகளும் கூடாது என வாக்களித்த போதிலும், சுற்றுச்சூழல் ரீதியாக வளம் வாய்ந்த இந்த மலைகளில் சுரங்கம் தோண்ட அனுமதிக்குமாறு ஒடிசா அரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகிறது.
















