“இந்த பிணங்கள்தாம் எங்களின் அடுப்புகள் எரிய உதவுகின்றன,” என்கிறார் விஜய், வாரணாசியின் ராஜா அரிச்சந்திரா சுடுகாட்டில் அந்த நாளின் இரண்டாம் தகனத்துக்கான சிதையை தயார் செய்தபடி. புகையும் சாம்பலும் கண்களையும் நாசியையும் உறுத்த, கைகளை வீசி அவற்றை விலக்குகிறார்.
வாரணாசியை சேர்ந்த 35 வயது விஜய் செளதரி பட்டியல் சமூகமான டோம் சமூகத்தை சேர்ந்தவர். தகனத்துக்கு கொண்டு வரப்படும் பிணங்களுக்கு தகனம் செய்யும் தொழிலை குடும்பத்தின் நான்காம் தலைமுறையாக அவர் செய்கிறார்.
பலரையும் போல விஜயின் வீட்டிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கிறது. ஆனால் 25 நாட்களாக சிலிண்டர் கிடைக்கவில்லை. “பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால் தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை. 1,000 ரூபாய் சிலிண்டரை (14.2 கிலோ) 2,000 ரூபாய் கொடுத்து வாங்குமளவு வசதி எங்களுக்கு இல்லை. எனவே பழையபடி தகனத்தில் மிஞ்சிய கட்டைகளை கொண்டு சமையல் செய்கிறோம். தினசரி கொஞ்சம் கட்டைகளை எடுக்கிறோம்,” என்கிறார் விஜய்.















