“யாரும் அவளைத் தொடவில்லை; யாரும் அவளை நெருங்கிக் கூட நிற்கவில்லை. ஜப் டாக்டர் சஹாப் ஆயா தோ வோ பி ஹாத் மே பஹன் கே, முஹ் தாக் கே செக் கர் ரஹா ஹை [மருத்துவர் வந்தபோது கூட, கையுறைகளையும், முகமூடியையும் அணிந்து கொண்டு பரிசோதனை செய்தார்].”
சுனிதா லகுரிக்கு மருத்துவமனைகள் புதிது இல்லை. அவர் தனது மகளை கணக்கில்லாத அளவுக்கு பலமுறை அழைத்துச் சென்றுள்ளார்.
அவரது ஏழு வயது மகள் ரியாவுக்கு ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது தலசீமியா இருப்பது கண்டறியப்பட்டது. தலசீமியா ஒரு மரபணு இரத்தக் கோளாறு. அதிலும் ரியாவுக்கு உள்ள வகைக்கு வாழ்நாள் முழுவதும் இரத்தமாற்றம் தேவைப்படுகிறது. அதனால், சுனிதா மாதம் இரண்டு முறை அரசு மருத்துவமனைக்கு வருவதால், அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் அவருக்கு நல்ல பரிச்சயம்.
ஆனால் 2025-ல், செப்டம்பர் மாதம் சென்று வந்ததை அவரால் ஒருபோதும் மறக்க முடியாது.
மாநில அரசின் சுவாமி விவேகானந்தா நிஷக்த ஸ்வவ்லம்பன் புரோட்சஹான் யோஜனாவின் கீழ் ரூ.1,000 மாதாந்திர உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க சென்றுள்ளார். அதில், விண்ணப்பிக்க கூடுதல் பரிசோதனைகள் செய்யுமாறு சொல்லப்பட்டிருந்தது.
முடிவுகள் வந்தபோது, ஒரு சோதனை எல்லாவற்றையும் மாற்றியது. அவரது மகளுக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் என இருந்தது. அவருக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், எச்.ஐ.வி பயங்கரமான எய்ட்ஸுக்கு (பெறப்பட்ட நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி) வழிவகுக்கும்.
“நாங்கள் இந்த நோயைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. இந்த நோய் என்னவென்று கூட எங்களுக்குத் தெரியாது,” என்று சுனிதா, பல வாரங்களுக்குப் பிறகும், அதிர்ச்சியோடு ரியாவுடன் தனது ஓரறை வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அவரது கணவர் விஜய் அடிக்கடி வேலைக்காக வெளியூருக்கு செல்வார். இம்முறை வீட்டை கட்ட போதுமான பணத்தை கொண்டு வருவார் என்று நம்பிக்கையோடு இருந்தார். ஐந்து பேர் கொண்ட இவர்களின் குடும்பம், ஜார்க்கண்டில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்ட ஹோ சமூகத்தைச் சேர்ந்தது.















