“எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டங்கள் தொடரும்,” என்று மே மாத மதிய வெயிலில் நடந்தபடி மென்மையாக சொல்கிறார் விஜயா அந்தர். அவருடன் வடக்கு மும்பையை சுற்றி 100 கிலோ மீட்டரில் உள்ள தானே, பல்கர் மாவட்டங்களைச் சேர்ந்த 35,000 பழங்குடியின விவசாயிகள் வந்திருந்தனர்
தானே மாவட்டத்தின் ஷஹாபூர் தாலுகாவில் உள்ள போராலா-அகாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயா, ஆண்டு தொடக்கத்தில், நாசிக்கிலிருந்து மும்பைக்கு மார்ச் 6 முதல் 12 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்பான அகில இந்திய கிசான் சபா (ஏ.ஐ.கே.எஸ்) தலைமையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நீண்ட பேரணியில் பங்கேற்றார். கடந்த வாரம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந்த மற்றொரு பேரணியிலும் விஜயா மீண்டும் பங்கேற்றார். இம்முறை பழங்குடி விவசாயிகளின் வெற்றிப் பேரணியை குறிக்கும் வகையில் நிர்தார் அணிவகுப்பு நடைபெற்றது. அவர்களின் போராட்டத்தைத் தொடரும் உறுதிபாட்டைக் இது குறிக்கிறது.
"வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பிற பிரச்னைகள் குறித்து மாநில அரசு அளித்த எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்தக் கோரி மேற்கொள்ளப்பட்ட நீண்ட பயணத்தின் தொடர்ச்சி இது," என்று ஏ.ஐ.கே.எஸ் தலைவர் அசோக் தவாலே கூறுகிறார்.
மும்பை-நாக்பூர் சம்ருதி நெடுஞ்சாலை போன்ற திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தும் அரசின் திட்டங்களை கடுமையாக எதிர்ப்பதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார். விவசாயிகளின் ஒப்புதலுடன் மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு மீறியுள்ளது.








