2018 பிப்ரவரி கடைசி வாரத்தில் நான் இடுகுளகொட்டாவுக்கு சென்றபோது பொடியம் பாபிராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு தார்பாய் கூடாரத்தில் தங்கியிருந்தனர். ஆந்திராவின் போலவரம் மண்டலத்தில் உள்ள இந்த கிராமம் 2017 அக்டோபர் 10-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியபோது நான்கு அறைகள் கொண்ட செங்கல் மற்றும் மண் வீடு பாதி இடிந்து விழுந்தது.
“10,000 ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள பாத்திரங்கள், கோழிகள், ஆடுகள் [பிற பொருட்கள்] போன்றவற்றை நாங்கள் இழந்துவிட்டோம்”, என்று 45 வயதாகும் கோயா பழங்குடியின விவசாயி பாப்பிராஜு கூறுகிறார். இட்டுகுலகோட்டா பழங்குடியின கிராமத்தில் சுமார் 180 கோயா குடும்பங்கள் வசிக்கின்றன. பாபிராஜு இரண்டு ஏக்கர் போடு (வன) நிலத்தில் விவசாயம் செய்கிறார். மூன்று ஏக்கர் நிலத்தை ஏக்கருக்கு ரூ.10,000 என ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ளார். ”இந்த 5 ஏக்கரில் உளுந்து பயிரிட்டுள்ளேன். ஜூலை மாதம் [2017] நான் 70,000 ரூபாய் முதலீடு செய்து பயிரிட்டவை அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது”, என்று அவர் கூறுகிறார்.
கூடாரத்திற்கான தார்பாய் விரிப்புகளின் விலை ரூ.2,500. அதை அருகிலுள்ள வயல்களில் வேலை செய்து பணத்தை திரட்டி ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலவரம் நகருக்குச் சென்று பாப்பிராஜு வாங்கினார். அதுவரை ஒரு மாதத்திற்கும் மேலாக அவரும் அவரது குடும்பத்தினரும் திறந்தவெளியில் கழித்தனர். சேதமடைந்த வீட்டிற்கு அருகில் சமைத்து சாப்பிட்டு உறங்கினர். அது குளிர்காலம் என்பதால் இரவுகளில் திறந்தவெளியில் உறங்குவதற்கு குளிராக இருந்தது. அவர்களின் அண்டை வீடு கான்கிரீட் என்பதால் வெள்ளத்தில் சேதமடையவில்லை. அவர்கள் இக்குடும்பத்தினருக்கு உணவு மற்றும் போர்வைகளை வழங்கினர்.
ஏப்ரல் மாத மத்தியில் நான் மீண்டும் இடுகுளகோட்டாவுக்கு சென்றபோது, பாப்பிராஜு, அவரது மனைவி, 22 வயது மகன் முத்யாலா ராவ், மருமகள் மற்றும் 19 வயதான மகள் பிரசன்னா அஞ்சலி ஆகியோர் கூடாரத்திலேயே தங்கியிருந்தனர். டிசம்பரில், உள்ளூர் தொழிற்சங்க ஆர்வலர்கள் கூடாரத்திற்கு அருகில் அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடிய கொட்டகைகளை அமைத்திருந்தனர். அக்குடும்பம் இரண்டையும் தங்குமிடங்களாக பயன்படுத்தியது.
கிராமவாசிகள் கணக்குபடி மற்ற 16 கோயா குடும்பங்களும் இதேபோன்று வெள்ளத்தில் தங்கள் வீடுகளை இழந்தனர்.









