"மண்பாண்டம் செய்வது என்பது சக்கரத்தை சுழற்றுவது மட்டுமல்ல; நீங்கள் தயாரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்," என்று பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரசூல்பூர் சோஹாவன் கிராமத்தின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி சுதாமா பண்டிட் கூறுகிறார். "ஒரு குழந்தையை வளர்ப்பது போல... முதலில், நீங்கள் களிமண்ணை குழைத்து, அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்க வேண்டும். பின்னர் அது வலிமைப் பெற அடுப்பில் வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டும். ”
தற்போது 54 வயதாகும் சுதாமா தனது 15 வயதில் களிமண் கலையைக் கற்றுக்கொண்டார். "என் தாத்தா மிகவும் திறமையான கைவினைஞர். ஆனால் என் தந்தை களிமண் பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே எனது தாத்தா இந்த திறமையை எனக்கு அறிமுகப்படுத்தினார். கிராமவாசிகள் என்னை அக்கலையின் 'உண்மையான' வாரிசு அல்லது சுதாமா கும்பார் [குயவர்] என்று அழைக்கிறார்கள்," என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.
சுதாமாவின் நாள் அதிகாலை தொடங்குகிறது. பறவைகள் கீச்சிடுகின்றன. அவரது மனைவி சுனிதா தேவி வீட்டின் முன் உள்ள பணியிடத்தை பெருக்கி, முந்தைய நாளின் உலர்ந்த களிமண் துண்டுகளை சக்கரம் மற்றும் பிற கருவிகளிலிருந்து அகற்றுகிறார். அதே நேரத்தில் சுதாமா களிமண்ணை தயார் செய்கிறார். "சீக்கிரம் தொடங்குவது நல்லது - நான் செய்யும் பொருட்கள் உலர போதுமான நேரம் கிடைக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
சுதாமா பயன்படுத்தும் களிமண், அருகிலுள்ள மாவட்டமான குர்ஹானி வட்டாரத்தில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துர்க்கி கிராமத்திலிருந்து வாங்கப்படுகிறது. "என் தாத்தா காலத்தில் நல்ல தரமான களிமண்ணைப் பெறுவதற்காக எங்கள் வீட்டிலிருந்து 30 அடி தூரம் வரை தோண்டுவோம்," என்று சுதாமா கூறுகிறார். கடந்த காலத்தில், மண்பாண்டங்கள் செய்வது ஒரு குடும்பத் தொழிலாக இருந்ததால், பணிகளைப் பகிர்ந்து கொள்ள பல கைகள் இருந்தன என்று அவர் விளக்குகிறார். இப்போது அவரால் ஒரு நாள் கூட தோண்ட முடியாது. தவிர, தோண்டுவது கடினமானது என்பதால் களிமண் வாங்குவது எளிதான தேர்வாகிவிட்டது என்று அவர் கூறுகிறார்: "இப்போது பூமியைத் தோண்ட இயந்திரங்கள் உள்ளன. நாங்கள் களிமண்ணுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் அதில் பல கற்கள் உள்ளன. அவற்றை அகற்றுவதற்கு நிறைய நேரமாகும்.”










