60 வயது கேவல்பாய் ரத்தோட் கனமான அடிகுழாயை இயக்குகிறார். ஒவ்வொரு முறை அடிகுழாயை அழுத்தும் போதும் அவருக்கு திணறல் ஏற்படுகிறது. முன் கை நரம்புகள் புடைத்துக் கொள்கின்றன. முகத்தில் உள்ள சுருக்கங்கள் இன்னும் தீவிரமடைகின்றன. அவரது இத்தனை முயற்சிக்கும் பிறகு பானையில் சொட்டு சொட்டாக தண்ணீர் கொட்டுகிறது. கிராமத்தினர் பலரும் தங்கள் நேரத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். குழாயில் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் நின்றுவிடக் கூடும்.
ஒரு மணி நேரம் கழித்து மாலை 5 மணியளவில் கேவல்பாய் இரண்டு பானைகளில் தண்ணீர் நிரப்பியிருந்தார். அவரது 65 வயது கணவர் ராமு பாறையில் அமர்ந்து வானை வெறித்துப் பார்க்கிறார். “சாலா ரே (முடிந்துவிட்டது),“ என்று மராத்தியில் அழைக்கிறார் கேவல்பாய். ராமு எழுந்து நின்றபடி அசைவின்றி இருக்கிறார். அவர் ஒரு பானையை மட்டும் எடுத்துச் சென்று தனது கணவரிடம் தருகிறார். அவர் பாதுகாப்பாக தனது தோளில் சுமக்கிறார். கேவல்பாய் மற்றொரு பானையை எடுத்துச் செல்கிறார். அவர் தனது கணவர் கையை தோளில் வைத்தபடி வீட்டை நோக்கி நடக்க தொடங்குகிறார். “அவருக்கு கண்பார்வை கிடையாது,“ என்று குழம்பிய என்னிடம் அவர் விளக்குகிறார்.







