மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் ராஜ்மஹால் மலைகளின் கிழக்கு எல்லையைக் காணலாம். அவை அதிகபட்சம் 500 மீட்டர் உயரத்தில் தட்டையான சிகரத்தை கொண்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான எரிமலைக்குழம்புகளால் இம்மலை உருவானதே இதற்கு காரணம். மலைகளில் பசால்ட் எரிமலைப் பாறைகள் உள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி யானைகள், புலிகள், கரடிகள், சிறுத்தைகள், மான் என பல்வேறு வகையான உயிரினங்களின் உறைவிடமாக இருந்தது. பாறைகள் நிறைந்த மேட்டுப் பகுதிகளில் சந்தாலிகள் எனும் பழங்குடியினரின் பல கிராமங்கள் இருந்தன. இப்போதும் உள்ளன.
பிர்பூம்மின் நல்ஹாதி வட்டத்தில் சமவெளிகளில் இருந்து எழும் எரிமலை பாறைகளின் மலைகளில் பொருடி பாஹார் ஒன்று. சாலை அமைப்பதற்கும், ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் கொட்டுவதற்கும், கட்டிடங்களுக்கான கட்டுமானப் பொருளாக நன்கு உடைத்து பயன்படுத்தவும் இந்த பாறை உதவுகின்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மலையின் தட்டையான உச்சி காடுகளாகவோ, சந்தாலிகளின் விளை நிலங்களாகவோ இருந்தன. இந்தியாவின் சாலை கட்டுமானம் மற்றும் பிற கட்டுமான தேவை அதிகரிப்பால், இம்மலையின் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டது. டைனமைட் மூலம் பாறைகள் பிளக்கப்பட்டு அருகிலுள்ள கிரஷர்களில் இடிபாடுகளாக உடைக்கப்பட்டு பின்னர் வெளியே கொண்டுச் செல்லப்படுகிறது.
2015 ஏப்ரல் மாதம், மேகமூட்டமான ஒரு நாளில் நிகழ்ந்த இந்த சுற்றுப்பயணத்தில் மலை அடிவாரத்தில் உள்ள பவானந்தபூர் கிராமத்திலிருந்து பொருடி பாஹார் உச்சி வரை எங்களை அழைத்துச் செல்லும்.
தொழிற்சாலையால் வயல்களை இழந்த கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பெரும்பாலும் சந்தாலிகள் தொழிலாளிகளாக இங்கு வேலை செய்கின்றனர். உள்ளூர்வாசிகள் இருந்தாலும், சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்தும் பலர் வந்துள்ளனர். சுரங்கப் பணியால் அப்பகுதி மட்டுமின்றி அவர்களின் விவசாய வாழ்வாதாரமும் சீர்குலைந்துவிட்டது. அவர்களிடம் பாதுகாப்பு கவசங்கள் ஏதுமில்லை. தொழிலாளர்களுக்கு பூட்ஸ், தலைகவசம், முகக்கவசம், கழிப்பறை வசதிகள், குடிநீர், மருத்துவ வசதி அல்லது விபத்துகளுக்கான இழப்பீடு என எதுவும் உரிமையாளர்களால் வழங்கப்படுவதில்லை.
சமூக சேவகர் காசிராம் ஹெம்ப்ரோமின் கூறுகையில், 2014 ஜூனில், பவானந்தபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சந்தாலிப் பெண் இந்த சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பட்டப்பகலில் ஒரு கிரஷர் மேலாளரால் பிடிக்கப்பட்டு மூன்று மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். ஆனால் அப்பெண் பயத்தால் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றார்.
வாகனம் சில குவாரி அலுவலகங்களைக் கடந்து சென்றது, அங்கு புகைப்படங்களை எடுப்பது ஆபத்து. இப்பகுதி ஒரு கல் குவாரி "மாஃபியா" மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. கேமராக்களுடன் வரும் வெளியாட்களை அவர்கள் தாக்கக்கூடும். எனவே அடுத்த படம் பொருடியின் உச்சியில் உள்ள சந்தன் நகர் என்ற கிராமத்திலிருந்து எடுக்கப்பட்டது, பின்புறம் பவானந்தபூர் கிராமம் உள்ளது.































