புலிட்சர் மையத்தின் ஆதரவில் பார்த் எம்.என். எழுதி வரும் தொடர் கட்டுரை தொகுப்புகளில் இதுவும் ஒன்று.
53 வயதாகும் தியோராவ் நகரியை, மழைக்கு முன் செய்த வேண்டுதல் துரத்துகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவரது விளைநிலத்தில், முழங்கால் அளவு தண்ணீருடன் கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் அவர் போராடினார். சக்லம்பா கிராமத்தில் மலைச்சரிவில் உள்ள அவரது 8 ஏக்கர் விளைநிலம் வெள்ளத்தால் பெரும் அழிவைச் சந்தித்தது.
“என் வயலில் ஆறு போல தண்ணீர் ஓடியது,” என்று அவர் விளக்குகிறார். “நீரை வெளியேற்ற ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது.”
முதுகெலும்பு உடைய அவர் செய்த அனைத்து முயற்சிகளும் வீணானது, ஆக்ரோஷத்துடன் கொட்டிய மழை மேகத்தை வெல்ல முடியவில்லை. பருத்தி, துவரை, கரும்பு பயிர்கள் சேதமடைந்து ரூ.3 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது. மலையிலிருந்து வெள்ள நீர் பாய்ந்து ஓடியதில் அவரது வயலுக்கு மேல் மண் அரிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவரது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியானது.
இழப்புகளில் இருந்து மீள்வது ஒருபுறம் என்றால், மகாராஷ்டிராவின் முக்கிய கோயில் ஒன்றுக்கு, நகரி ரூ.1.7 லட்சம் நிதி அளிப்பதாக வேண்டி இருந்தார். அந்த வேண்டுதலையும் இப்போது நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.















