சித்திரை மாத முதல் நாளில் மேற்கு வங்கத்தில் பாரம்பரியமாக கஜன் அல்லது சரக் எனும் சிறப்பு வகையான சிவன் வழிபாடு சித்திரை சங்கராந்தியன்று நடைபெறுகிறது. அன்று ஏப்ரல் 14 பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்தநாளும் கூட என்பது தற்செயலாக அமைந்துள்ளது.
புருலியா மாவட்டம் ரகுதிஹி கிராமத்தில் நடைபெறும் இச்சடங்கில் பங்கேற்கும் ஐந்தில் நான்கு பேர் இந்துக்களில் கீழ் நிலை சாதியான பவுரிஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிர்பும், பங்குரா மாவட்டங்களிலும் வசிக்கின்றனர். சுன்ரி (மதுபானம் தயாரிப்பவர்), கொயாலா (பால்காரர்), குமோர் (குயவர்) போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பக்தர்களாக உள்ளனர். அனைத்து கீழ்நிலை இந்து சாதியினரும், மிட்நாபூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள மஹிஷ்யாஸ் எனும் விவசாய சமூகத்தினரும் இச்சடங்கை கடைபிடிக்கின்றனர்.
இந்த வழிபாட்டு முறையில் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பாகுபாடுகளை சந்தித்த ஒடுக்கப்பட்ட சாதியினர் சிவன் மீதான பக்தியை வெளிப்படுத்தும் போது சமூகத்தில் தற்காலிக மரியாதையைப் பெறும் அரிய வாய்ப்பை நம்மால் காண முடிகிறது.
பக்தர்கள் அனைவரும் இளைஞர்கள். பெரும்பாலும் 20 அல்லது பதின்ம வயதுகளை சேர்ந்தவர்கள். பக்தர்கள் 15 நாட்கள் விரதத்தை கடைபிடித்து, அதிகாலை முதல் மாலை வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கின்றனர். இரவில் மட்டும் பழங்கள், பால் போன்ற சைவ உணவுகளை உட்கொள்கின்றனர்.
விரதத்தின் இறுதி நாளான சித்திரை சங்கராந்தியன்று மதியம் 3 மணி வரை கஜன் கடைபிடிக்கப்படுகிறது. கிராமத்தில் ஒதுக்குப்புறமான பகுதியிலிருந்து ஊர்வலமாக மூங்கில் கம்பங்களை கட்டி அதில் நின்றபடி சிவன் கோயிலை நோக்கிச் செல்கின்றனர். சிவ பக்தியில் சக்தி கிடைத்துவிட்டதாக பக்தர்கள் உணரும்போது கஜன் சடங்கு முடிகிறது.












