புனே, தானே சந்தைகளில் வாங்குவதற்கு யாருமில்லை என்பதால் பல விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை குப்பையில் கொட்டிச் சென்றதாக செய்தித்தாள் அறிக்கைகள் சொல்கின்றன .
நாக்பூரிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமராவதியின் ஹிவார்கெட் கிராம சந்தையில், ஆரஞ்சு விவசாயிகள் கடும் விலைச்சரிவை கண்டித்து தங்கள் பழங்களை குப்பையில் கொட்டிச் சென்றுள்னர்.
வியாபாரிகள் வாங்குவதை நிறுத்தியதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. பழைய நோட்டுகளை விவசாயிகள் ஏற்க மறுப்பதால் வியாபாரிகள் பழங்களை வாங்குவதற்கு முன்வரவில்லை.
பணமதிப்பு நீக்கம் எனும் மோசமான நடவடிக்கை தான் விவசாயிகளின் அவலநிலைக்கு காரணமா அல்லது மதிப்புள்ள பணத்தை மட்டுமே ஏற்க நினைத்து விவசாயிகள் தங்களை வருத்திக் கொள்கின்றனரா?
வியாபாரிகள் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணத்தை செலுத்துவதாக சொல்கின்றனர். ஆம்காவோன் கிராம முன்னாள் தலைவர் பவார் இதை ஏற்கிறார். எவ்வித தடையுமின்றி பணம் உடனடியாக வந்தடைகிறது.
அதே நாளில், தனக்கு தெரிந்த விவசாயிகள் எட்டு பேர் மண்டியில் பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு 80 குவிண்டால் பருத்தியை விற்றுள்ளதாக பவார் தெரிவித்தார். பருத்தி வருகை குறைவாக இருந்ததால் வியாபாரிகளும் குவிண்டால் ரூ.5000 கொடுத்து வாங்கிச் சென்றுள்ளனர்- இது வழக்கமான சந்தை விலையான ரூ.4750-4900 ஆகியவற்றை விட சற்று கூடுதலாகும்.
இதை ஏன் மற்ற விவசாயிகள் பின்பற்றுவதில்லை? பவார் விளக்குகிறார்:
பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வருமானத்தை வங்கிக் கணக்கில் செலுத்த அஞ்சுகின்றனர். காரணம் வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியில் தான் அவர்கள் பயிர்க் கடன் பெற்றுள்ளனர். நீண்டகாலமாக கடனில் இருக்கும் பெரும்பாலானோர் கடனை திருப்பி செலுத்தவும் முடியாமல், குடும்பத்தையும் கவனிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
அவர்களின் வருவாய் ஒருமுறை வங்கிக் கணக்குகளுக்கு சென்றுவிட்டால், வங்கிகள் பணத்தை திருப்பி எடுக்க அனுமதிக்காது என அஞ்சுகின்றனர். மார்ச் மாதத்திற்குள் மீதமுள்ள கடன் தொகையை செலுத்துமாறு வற்புறுத்துகின்றனர். இது பெரும்பாலான விவசாயிகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
விவசாயிகள் கணக்கிலிருந்து தன்னிச்சையாக வங்கித் தொகையை பிடித்தம் செய்து கொள்ளுமாறு அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. ஆனால் வங்கிகள் இந்த தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். இனிவரும் ஆண்டுகளிலும் விவசாயிகள் கடன் வாங்க தங்களிடம் வரவேண்டும் என அவர்கள் நன்கு அறிந்துள்னர்.
“பணப் பரிவர்த்தனையை நான் ஏற்கிறேன். எனது பெயரில் எந்த கடனும் கிடையாது, எனக்கு பணத் தேவையும் உடனடியாக இல்லை,” என்றார் பவார். “எனது பயிர்க்கடன் என் தந்தையின் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளதால், எனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்ய மாட்டார்கள்.”
இதேப்போன்று மண்டியில் விற்ற அந்த எட்டு விவசாயிகளுக்கும் உடனடி பணத்தேவை இல்லை என்றார் அவர். “ஆனால் சிறு விவசாயிகளுக்கு வேறு வருவாய் ஆதாரம் கிடையாது. அவர்கள் காசோலை அல்லது பண பரிவர்த்தனையை ஏற்பதில்லை.”
நவம்பர் 16, புதன்கிழமையன்று, 38 வயது சுதாம் பவார் நாக்பூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் வர்தா மாவட்டம் செலு நகரில் உள்ள மண்டியில் ஒற்றை விவசாயியாக தனது ஒன்பது குவிண்டால் பருத்தியை விற்கிறார்.
“பணமதிப்பு நீக்கம் விவசாயிகளை சிதைத்துவிட்டது,” என்றார் செலு மண்டியில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழு(APMC) துணைத் தலைவரும், விவசாயியுமான ராம்கிருஷ்ணா உமதே. சோயாபீன், பருத்தி அதிகம் விளைவிக்கும் சுமார் 100 கிராமங்களுக்காக அந்த மண்டி செயல்படுகிறது. “ஒரு வாரமாக உற்பத்தியாளர்களும், வாங்குபவர்களும் எங்கள் சந்தைக்கு வருவதில்லை.”