எங்கு முதலில் பார்த்தேன்? புத்தகத்தில் வாசித்தேனா, அல்லது ஆவணப்படத்தில் பார்த்தேனா அல்லது முஷ்டி மடக்கி அநீதிக்கு எதிராக தெருக்களில் நடந்த போராட்டத்தில் பார்த்தேனா? அவள் ஒரு கவிதையாக இருக்கலாம். விடுதலை கோஷம் எனக்கு புல்லரிப்பை கொடுத்திருக்கலாம்.
கடைசியாக எப்போது அவளை பார்த்தேன் என உண்மையாக எனக்கு தெரியவில்லை.
அவள் தன் முகங்களையும் பெயர்களையும் மனதில் நிற்க முடியாதளவுக்கு பல முறை அவள் மாற்றிவிட்டாள். சில நேரங்களில் பணியிடத்தின் உடைந்த சங்கத்தை தைக்கும் திண்டுக்கல்லின் தையல் பெண்ணாக அவள் இருக்கிறாள். இன்னொரு சமயத்தில் பேரணியில் தன்னுடைய உரிமைகளை உறுதி செய்வதற்காக வாடகைக்கு டிராக்டர் எடுத்து ஹுப்பல்லியிலிருந்து பெங்களூருவில் செல்லும் பெண்ணாக இருக்கிறாள். மற்றுமோர் சமயத்தில் எவரும் பசியுடன் இருக்கக் கூடாது என வீடு வீடாக தெற்கு கேரளாவில் செல்லும் பழம்பெரும் தோழராக இருக்கிறாள். அவள் தொடர்ந்து தன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறாள். அதே பிடிவாதமான துணிச்சலுடனும் பணிந்து செல்ல மறுப்பவளாகவும் அவள் வெவ்வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறாள்.
அதோ! மீண்டும் அவளை பார்த்துவிட்டேன். தடுப்பரண்களை தாண்டி குதிப்பவளாக. வீழ்ந்தவர்களுக்கு ஆதரவளிப்பவளாக. சரணடைய மறுக்கும் நம்பிக்கையாக அவள் காட்சியளிக்கிறாள்.
இது அவளின் நிலமாகவே எப்போதும் இருந்திருக்கிறது. விடுதலை.


