“சேகரிக்கும் மரத் துண்டுகளை இனிமேல் யாரும் விற்க மாட்டார்கள்,” என்கிறார் ரூபினா பீபி. “அவர்கள் அடுப்புக்கு விறகுகளாக அவற்றை வைத்துக் கொள்கின்றனர்.” தனது தற்காலிக குடிசைக்கு வெளியே அமர்ந்திருக்கும் அவர், ஒருகாலத்தில் கதவாக பயன்பட்ட மரத் தட்டியை உடைத்துக் கொண்டிருக்கிறார்.
“ஏ தோ லக் ஜாயேங்கி [இது மாதிரி இரண்டு தட்டிகள் தேவைப்படும்],” என்று ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு சமைக்கும் ரூபினா சொல்கிறார். 2026 பிப்ரவரி மாதம் ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கியது முதல் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. இரண்டு கிலோ சிலிண்டரின் விலை இப்போது ரூ.440-500 வரை விற்கிறது – போருக்கு முன் கள்ளச்சந்தையில் அவர்கள் வாங்கிய விலையை விட இது இரு மடங்கு அதிகம்.
குப்பைகளை சேரிக்கும் இக்குடும்பத்திற்கு இப்போது மரத் துண்டுகள் சமையலுக்கு முக்கியமானதாக ஆகிவிட்டது. ஒரு வாரத்தில் அவர்கள் ஐந்து கிலோ வரை சேகரிப்பார்கள். அல்லது “கிலோ ஐந்து ரூபாய்க்கு விறகு வாங்கிக் கொள்வோம்,” என்கிறார் ரூபினா.
வடமேற்கு டெல்லியின் பல்சுவாவில் குப்பை சேகரிக்கும் மக்கள் வசிப்பிடத்தில் அவர் வசிக்கிறார். இவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தின் பஷ்சிம் மெடினிப்பூர் மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்து முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையினர். மூன்று-நான்கு அடுக்கு உயர கட்டடங்கள் அளவுக்கு குவிந்துள்ள குப்பை கோபுரத்திற்கு அருகே வசிக்கின்றனர். ஆண்கள் தெருக்கள், குடியிருப்புகள், நகராட்சி குப்பை கிடங்குகளில் இருந்து குப்பைகளை சேகரித்து வருகின்றனர். பெண்கள் அவற்றிலிருந்து பிளாஸ்டிக் புட்டிகள், பொட்டலங்கள், ரப்பர், கண்ணாடி, தெர்மோகோல் போன்றவற்றை பிரித்து பழைய இரும்புக் கடைகளில் விற்கின்றனர்.














