ஒரு மாதத்தில் மூன்று முறை நூலகத்தை மூட காவல்துறையினர் முயன்றனர். ஆனால் அது மீண்டும் திறக்கப்பட்டது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எனும் சமூக ஊடக பகடி பக்கம் (மீம் பேஜ்) இளைஞர் அமைப்பாக வளர்ந்து 2026, ஜூன் 20ஆம் தேதி, ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஊழல் காரணமாக வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் நடைபெற்றதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அந்த அமைப்பு முன்வைத்தது. அந்த இடத்தில் அனைத்து இந்திய மாணவர் கூட்டமைப்பின் (AISF) சார்பில் நூலகம் ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் நோக்கம் மிகவும் நேர்மையானது.
“போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் அடுத்த சில நாட்களுக்கு வீடாக மாற இருந்தது,” என்கிறார் AISF தேசிய தலைவர் விராஜ் தேவாங். “நாள் முழுவதும் முழக்கமிடுவதும், மற்றவர்களின் உரைகளை கவனிப்பதுமாக இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு நிறைய நேரமும் கிடைக்கும். இதுபோன்ற சூழல்களில், நூல்களே சிறந்த நண்பன்.” போராட்டக்காரர்களும், மாணவர்களும் இலக்கியம் படிக்க வேண்டும் என்பதும் தங்களின் சமூக, அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் எங்களின் எண்ணம்.”
மாணவ செயற்பாட்டாளர்கள் சிவப்பு துணியால் ஒரு மர மேசையை மூடி கொண்டு வந்தார்கள். அதில் எழுதப்பட்ட வாசகம், ‘பிரதான் வீழ வேண்டும்.‘ முதல் நாளில், “எங்களிடம் சிவாஜி மகராஜ், பகத் சிங், பாபாசாஹேப் அம்பேத்கரின் புத்தகங்கள் இருந்தன,” என்கிறார் அன்றாடம் நூலகத்தை நிர்வகித்து வரும் 20 வயது மோஹித். “புரட்சிகர இலக்கியமற்ற போராட்டம் கொள்கையில்லாத தலைவரைப் போன்றது. எவ்வாறு புரட்சி செய்வது, எதிர்ப்பது என்பதற்கான வழிகாட்டுதல்களை போராட்டக்காரர்களுக்கு இலக்கியமே அளிக்கிறது.”









