மும்பையில் எல்லா மூலைகளும் மெட்ரோ ரயிலுக்கும் நெடுஞ்சாலைகளுக்கும் இணைக்கப்படும் நிலையில், டாமு நகர்வாசிகள், கொஞ்ச தூரம் செல்வதற்கே போராட வேண்டியிருக்கிறது. இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளிக்குதான் அவர்கள் செல்கீறார்கள். ஓரடி சுவரைத் தாண்டி, குப்பைகளில் நாற்றத்தினூடாக நடந்து செல்ல வேண்டும் என்கிறார்கள். காய்ந்த புற்களைக் கொண்ட திறந்த வெளி அது. இங்கிருக்கும் சில மரங்கள் கொஞ்சம் தனிமையேனும் கொடுக்குமா?
சாத்தியமில்லை. “தனிமை இங்கு கிடையவே கிடையாது,” என்கிறார் 51 வயது மிரா யெடே. டாமு நகரில் நீண்ட காலம் வாழ்பவர். “காலடி சத்தம் ஏதேனும் கேட்டால், பெண்களாகிய நாங்கள் உடனே எழுந்து நிற்க வேண்டும்.” பல வருடங்களாக இப்பகுதி, ஆண்களுக்கும் பெண்களுக்குமென வலது மற்றும் இடதாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், “குறைவான இடைவெளிதான் அது. சில மீட்டர் தூரம் இருக்கும். யார் அதை அளந்து பார்த்தார்கள்?” என்கிறார். இரு பகுதிகளுக்கு இடையே சுவர் போன்ற எந்த தடுப்பும் இல்லை.
டாமு நகரில் வசிப்பவர்கள் பலர், கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் ஆவர். வடக்கு மும்பை தொகுதியின் இப்பகுதியில் இப்பிரச்சினை பல காலமாக நீடித்து வருகிறது. பல கட்டங்களாக நடத்தப்படும் 18வது மக்களவைக்கான தேர்தலிலும் அவர்களுக்கு இதுதான் பிரச்சினையாக இருக்கிறது. மிராவின் மகன் பிரகாஷ் யெடே சொல்கையில், “எல்லாமுமே நாட்டில் சரியாக இருப்பதாக ஒரு பிரசாரம் முன்வைக்கப்படுகிறது,” என்கிறார். பிரகாஷ் நம்முடன் பேசிக் கொண்டிருக்கும் அவரது வீட்டின் கூரை, உலோகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிக வெப்பத்தை அது ஈர்க்கக்கூடியது.
“நாட்டின் இப்பகுதிகளில் இருக்கும் மெய்யான பிரச்சினைகளை பற்றி எவரும் பேச விரும்புவதில்லை,” என்கிறார் 30 வயது பிரகாஷ். டாமு நகரில் வசிக்கும் 11,000 பேர், எப்படி சிரமங்களுடன் வாழ்கின்றனர் என்பதை சொல்கிறார். கழிவறைகளோ குடிநீர் இணைப்போ மின் இணைப்போ அங்கு இல்லாததால் உருவாகும் பிரச்சினைகளும் அதிகம். டாமு நகர் என்ற அந்த குப்பம், சென்சஸ்ஸில் பீம் நகர் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உடையக் கூடிய சுவர்களும் தார்ப்பாய்களும் கூரைகளும் கொண்ட 2,300 வீடுகள் அங்கு இருக்கின்றன. இவையாவும் சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவுக்குள் இருக்கும் குன்றில் அமைந்திருக்கிறது. குறுகிய, சமமற்ற, பாறைகள் நிறைந்த பாதையில், சாக்கடையை தவிர்த்து நடந்து வீடுகளுக்கு செல்ல வேண்டும்.





















