இனி காதர் அலியின் குரல் எங்கும் ஒலிக்காது.
நான் அவரை கடைசியாக நவம்பர் 2025ல் சந்தித்தபோது, அவரால் பேசக்கூட முடியவில்லை. அவரது சிறிய தகரக் கூரை வீட்டிற்குள் இருமலின் சத்தம் மட்டுமே கேட்டது. முன் முற்றத்தில் சில கோழிகளைத் துரத்தும் சேவல் கத்தும் சத்தம் கூட அபாய அறிகுறி போல ஒலித்தது. உள்ளே, காதர் ஒரு மரக் கட்டிலில் சோக முகத்துடன் படுத்த படுக்கையாக கிடந்தார்.
முன்பு, உதவி இல்லாமல் நடக்கவும், பழைய விஷயங்களை நினைவு கூறவும், மெல்லிய குரலில் கொஞ்சமாக பேசவும் முடிந்தது. ஆனால் நவம்பர் மாதத்திற்குள் கைகளைக் கூட அசைக்க முடியாத அளவுக்கு பக்கவாதம் மோசமாகி படுத்தப் படுக்கையாகி விட்டார். தான் பிறந்த மண்ணில் வாழும் உரிமைக்காக பல ஆண்டுகளாக போராடியதை போலவே உயிரோடும் போராடிக் கொண்டு இருந்தார்.
“சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பு, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அவரது உடலில் இரத்த அளவு குறைந்து கொண்டிருந்தது.” அசாம் காமரிகுரி கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டின் வராண்டாவில் நின்று எங்களுடன் பேசிக் கொண்டிருந்த காதரின் 33 வயது மகன் ஷாஹிதுல் இஸ்லாம், "அவரால் இப்போது சாப்பிடவோ, பேசவோ, நகரவோ முடிவதில்லை. அவர் எவ்வளவு காலம் எங்களோடு இருப்பார் என்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று கூறினார்.
காதர் ஏதோ நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டு, கண்கள் திறந்த வண்ணம் இன்னும் சுயநினைவுடன் இருந்தார். ஆனால் அதுவும், இருக்கும் ஒரே கதவு வழியாகவும், தகர கூரையின் சிறு பிளவு வழியாகவும் ஊடுருவிய சூரியனின் கடைசி கதிர்களைப் போல மறைந்து போனது.
நவம்பர் 18, 2025, நாங்கள் பார்த்து வந்த சில நாட்களுக்குள், 66 வயதில் காதர் மறைந்து விட்டார்.











