நாகாலாந்துக்கு அருகே அமைந்திருக்கும் அஸ்ஸாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் தாய் துருங் கிராமம் இருக்கிறது. அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அந்த கிராமம் திபோமியா ஹபி என்கிற பெயரில் குறிக்கப்பட்டிருக்கிறது. பழைய மண் பாதைகள் நிறைந்த ஊரில் செழித்திருக்கும் பசுமையில் பாரம்பரிய சங்க் கர்கள் (மூங்கில் மேல் அமைந்திருக்கும் வீடுகள்) சிறு தோட்டங்களுடனும் மூங்கில் வேலிகளுடனும் அமைந்திருக்கின்றன. அந்த கிராமத்தில் 77 வயது விவசாயியான அனந்தா துருங் வசிக்கிறார். தாய்மொழியான தாய் துருங் வார்த்தைகளுக்கான களஞ்சியத்தை அவர் உருவாக்கி வருகிறார்.
“மொழி என்பது ஓடும் நதி போன்றது. ஒன்று போல இருக்காது. அதே நேரத்தில் ஒரேயடியாக மாறினால், அது இறந்து போகும்,” என்கிறார் அவர். சிறு விவசாயியான அவர், ஐம்பது வருடங்களாக தாய்மொழியை ஆவணப்படுத்துகிறார். துருங் பழங்குடி பற்றி ஆய்வு செய்து, வார்த்தைகளை சேகரித்து, அவற்றின் தோற்றத்தையும் இலக்கணத்தையும் புரிந்து, பல புலப்பெயர்வுகளையும் பண்பாட்டு ஒருங்கிணைவையும் புரிந்து தன் பணியை செய்து கொண்டிருக்கிறார். புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களிலும் எழுதி வருகிறார்.
இவை எல்லாவற்றையும் தன்னுடைய ஐந்து பிகா (1.6 ஏக்கர்) நிலத்தில் வரும் வருமானத்தை செலவழித்து அவர் செய்கிறார். 40 வருடங்களுக்கும் மேலாக ‘அதிகாரப்பூர்வமற்ற ஆசிரியராக’வும் நிர்வாகியாகவும் ஊதியமற்று அவர் பணி ஆற்றினார். அரசு உதவியை பள்ளி பெற்றதும், அவருக்கு குமாஸ்தாவுக்கான ஊதியம் கொடுக்கப்பட்டது. அச்சமயத்தில் அவர் ஓய்வு பெற மூன்று மாதங்களே இருந்தன. எனினும் மொழியை காக்கும் அவரது பணியின் குறுக்கே எதுவும் வரவில்லை.










