* * *
ஆகஸ்ட் 1 அன்று நான் லத்தூரை அடைந்தபோது நேர்மறையாக நடந்தது. காலக்கெடுவை அரசு ஆகஸ்ட் 4 வரை நீட்டித்திருந்தது. நீண்ட வரிசையில் காத்திருக்க விவசாயிகளுக்கும் இன்னும் சில நாட்கள் கூடி இருக்கிறது
லத்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஜால்கோட் கிளையில், 40 வயது நாகேஷ் கேந்திரே ஆனந்தமாக வெளியே வருகிறார். 10 ஏக்கர் குடும்ப நிலத்தை அவரும், அவரது மூன்று சகோதரர்களும், பெற்றோர்களும் பங்கிட்டு கொண்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வர வேண்டும் என்று வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியது. “என் சகோதரன் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோஹாவில் படிக்கிறான்,” என்கிறார். “அவர்கள் எங்களை பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வைத்தனர். படிப்பை விட்டுவிட்டு அவன் பிரீமியம் செலுத்த வரிசையில் நிற்க வேண்டுமா? ஏன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்? ஆவணங்கள் முறையாக இருப்பதால் நானே அவர்கள் சார்பில் தாக்கல் செய்யக் கூடாதா? என வங்கியில் நான் சண்டையிட்ட பிறகு இறுதியில் ஏற்றுக் கொண்டனர். காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் எனக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும்.“
காலக்கெடு நீட்டிப்பில் கிடைத்த நிம்மதியும் நீடிக்கவில்லை. ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆஃப்லைன் படிவங்களை ஏற்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு அதிகாரிகள் மின்னஞ்சல் அனுப்பிவிட்டனர். ஆகஸ்ட் 4 வரையிலான காலக்கெடு, இணைய வழி பதிவேற்றத்திற்கு மட்டுமே என்று கூறிவிட்டனர். பீடில் உள்ள டால்கெட் கிளையில் கணேஷ் மஸ்கேவுக்கு இந்த திடீர் மாற்றங்கள் குறித்து அறிய நான் போன் செய்தேன். "இன்று காலை சுமார் 100 விவசாயிகள் வங்கியின் முன் கூடினர்", என்றார். "என்னால் முன்பு 1,600 படிவங்களை ஏற்க முடிந்தது. என்னால் இப்போது எதுவும் செய்ய முடியாது என்று விவசாயிகளிடம் கூறினேன். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இ-சேவை மையத்தை நோக்கி விரைந்தனர்.“
டால்கெட்டில் உள்ள இ-சேவை மையம் வங்கியிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளது. அதிகபட்சமாக, சுமார் 6-8 பேர் உள்ளே வரலாம். இதை சந்தோஷ் கெய்க்வாட் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். ஜூலை 30 அன்று, வலைத்தளம் (http://agri-insurance.gov.in) நெரிசலால் முடங்கியதாக அவர் என்னிடம் கூறினார். "பதிவிறக்கம், ஸ்கேனிங், பதிவேற்றம், ஆன்லைனில் பணம் செலுத்துதல் - இவற்றுக்கு நிறைய நேரம் ஆகும்," என்று அவர் கூறினார். "சர்வர் நடுவில் நின்றுவிட்டால், நீங்கள் முதலில் இருந்து தொடங்க வேண்டும்." இரவுபகலாக கூட இந்த மையத்தை இயக்கிய அவரால் ஒரு வாரத்தில் 30 விவசாயிகளின் படிவங்களை மட்டுமே பதிவேற்ற முடிந்தது. 100க்கும் மேற்பட்டோர் நம்பிக்கையுடன், விரக்தியுடன் காத்திருந்தனர்.
பின்குறிப்பு: ஜூலை 31 வரை, 39 லட்சம் படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று மாநில வேளாண் அமைச்சர் பாண்டுரங் ஃபண்ட்கர் நம் செய்தியாளரிடம் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டில், 1.09 கோடி விவசாயிகள் பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பித்ததாக, மாநில அரசு மார்ச் மாதத்தில் தெரிவித்தது. அதே நேரத்தில் திட்டத்தை அணுக ஆதாரை கட்டாயமாக்கியது. 2017 ஆம் ஆண்டிற்கான இறுதி எண்ணிக்கையை அரசு இன்னும் தொகுக்கவில்லை என்றாலும், விண்ணப்பங்களின் அளவு மற்றும் காலக்கெடு ஆகஸ்ட் 4 வரை என நான்கு நாட்கள் மட்டும் நீட்டிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, பயிர் காப்பீட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைப் போன்றே இருப்பதற்கு சாத்தியமில்லை.
எவ்வாறாயினும், எண்ணிக்கையில் வித்தியாசத்தை உணர வேண்டும் என்று ஃபண்ட்கர் கூறுகிறார்: "கடந்தாண்டு வரை, பயிர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பயிர் காப்பீட்டை ஏற்றுக்கொண்டோம். எனவே ஒரு விவசாயி நான்கு பயிர்களை சாகுபடி செய்கிறார் என்றால், நான்கு படிவங்களை நிரப்பினார். இந்த முறை, ஒரு விவசாயிக்கு ஒரு படிவம், அதனால்தான் எண்ணிக்கை குறைந்துள்ளது. நாங்கள் ஆகஸ்ட் 5 அன்று மட்டுமே ஆஃப்லைன் படிவங்களை ஏற்றுக்கொண்டோம், அன்றைய தினம் 1,27,000 படிவங்களைப் பெற்றோம். ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை, எங்களுக்கு ஆன்லைன் படிவங்கள் மட்டுமே கிடைத்தன. இம்முறை இறுதி எண்ணிக்கை சுமார் 70 லட்சமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
தமிழில்: சவிதா