"கஹர் பர்பா தா [அது ஒரு பேரழிவு, சர்வநாசம்]," என்று விசித்திரமான பெயரைக் கொண்ட டைம் பாஸ் நினைவு கூர்கிறார். "பஹுத் லாஷ் ஜலாயா தா. கிந்தி கே பஹார் ஹோ கயா தா [கணக்கு வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அவ்வளவு உடல்கள் எரிந்தன]."
கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பாட்னாவின் மிகப் பழமையான சுடுகாடான பான்ஸ் படித்துறை சுடுகாட்டில் கோவிட்-19 தாக்கி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, 21 வயதான டைம் பாஸை கண்டுகொள்ள மறுபடி ஆளில்லை. பெருந்தொற்றின் போது அவரைத் தேடாதவர் யாருமில்லை. இப்போது அவர் நகரத்தில் கண்ணுக்குத் தெரியாமல், இடம்பெயர்ந்து, வேலையிழந்து சுற்றித் திரிகிறார்.
வழக்கமான வேலையோ வருமானமோ இல்லாமல் காலம் கடத்தும் அவர், தனது பெயருக்கேற்றாற்போல், டைம் பாஸ் வாழ்க்கை வாழ்கிறார்.
ஆனால், அந்தப் பெயர் அவருக்கு அதனால் வரவில்லை. அது அவருடைய மாமா ஜுக்னு ராம் செய்த வேலை. அவர் பிறந்த சமயத்தில், ஜுக்னு ராம், சன்னி தியோல் படம் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்தார். வீட்டில் உள்ள பெண்கள் அவர் சும்மா இருப்பதைப் பற்றிக் கிண்டல் செய்தபோது, அவர் கிண்டலாக குழந்தைக்கு அந்த பெயரை சூட்டியுள்ளார்.
"இப்போது எந்த வேலை வந்தாலும் செய்கிறேன்," என்கிறார் டைம் பாஸ். "மெட்ரோவில் கழிப்பறைகளையும், சில நேரங்களில் சாக்கடைகளையும் சுத்தம் செய்கிறேன். அழுகிய பன்றியைத் தூக்குகிறேன். சில நேரங்களில் உரிமை கோரப்படாத உடலைத் தகனம் செய்கிறேன். குப்பைகளையும் சேகரிக்கிறேன்" என்று கிடைக்கும் வேலைகளை பட்டியலிடுகிறார்.
ஒவ்வொரு முறையும் இறந்த, அழுகிய, கைவிடப்பட்ட உடல்களை அகற்ற ஆள் வேண்டும் போது, டைம் பாஸ் தேடப்படுகிறார். ஒரு பிணத்தின் துர்நாற்றம் காற்றில் பரவினால், டைம் பாஸ் அழைக்கப்படுகிறார். ரயில் தண்டவாளத்தில் ஒரு உடல் சிதைந்து கிடந்தால், டைம் பாஸ் மீண்டும் அழைக்கப்படுகிறார். நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு அடையாளம் தெரியாத உடல் கிடந்தால், ஒரு போலீஸ் ஜீப் அனுப்பப்படுகிறது. பின்னர் அவர் பிரேதப் பரிசோதனை அறைக்கு வெளியே காத்திருக்கிறார்.
அந்த வேலைக்கு பயிற்சி பெற்றவர் என்பதால் அவருக்கு அந்த அழைப்புகள் வருவதில்லை, மாறாக அவர் ஒரு தோம் என்பதால் வருகின்றன. தோம்கள், பீகாரில் மிகவும் நலிவடைந்த சமூகக் குழுக்களில் ஒன்றான மகாதலித்துகள். 2023 சாதி கணக்கெடுப்பின்படி, அவர்களின் எண்ணிக்கை மாநிலத்தின் 131 மில்லியன் மக்கள்தொகையில் வெறும் 0.20 சதவீதமான 2,63,512 மட்டுமே.
இந்து படிநிலையின் அடிமட்டத்தில் வாடும் இவர்கள், பெரும்பாலும் ஆதிக்க சாதிகளால் திணிக்கப்பட்ட, இறந்தவர்களைப் பராமரிக்கும் வேலை அல்லது சுகாதாரப் பணி போன்ற தொழிலில் சிக்கியுள்ளனர்.

















