பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள தர்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களின் மகனான லால் சிங், 1997-ல் மும்பைக்கு வருகிறார். வறுமையும் போராட்டமும் நிறைந்த சொந்த மண்ணை விட்டு, நம்பிக்கையின் ஒளியான மும்பை வந்தடைகிறார். வாழ்வாதாரத்தைத் தேடி இந்தியா முழுவதிலும் உள்ள கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம்பெயர்ந்த 2.1 கோடி பேரில் ஒருவரும், அதே தசாப்தத்தில் மும்பைக்கு படையெடுத்த 25 லட்சம் பேரில் ஒருவராகவும் அவர் இருந்தார். ஒரு பாதுகாவலராக, தொழிற்சாலை தினக்கூலியாக, அலுவலக உதவியாளராக, நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்பவராக, சமையல்காரராகப் பணியாற்றுகிறார். ஆனால் மும்பையில் ஒரு புது ஆர்வத்தையும், கனவையும் காண்கிறார். நடிப்பு மற்றும் எழுத்தின் மீதான தனது ஆசையையும் கண்டறிகிறார்.
மும்பையில் 28 ஆண்டுகளாக, லால் சிங் தனது வாழ்வாதாரத்திற்காக உழைத்து, தனது நாட்களைக் கழிக்கிறார். ஆனாலும் தொடர்ந்து, தனது திறமைகளை மெருகேற்றி, தனது திரையுலக கனவுகளையும் வளர்த்து வருகிறார். இது லால் சிங்’கின், சவால் நிறைந்த, ஊக்கமளிக்கும், நீண்ட பயணத்தின் கதை.
தமிழில் : அஹமத் ஷ்யாம்


