“பாதாமி பழம் இப்போது சுவை மாறிவிட்டது. ”
“முழங்கால் வரை பனிப்பொழிவு இருந்த ஞாபகம்.”
“எப்போதும் மழை இருக்கும், ஆனால் சேதம் ஏற்படுத்தாது, எங்களை அச்சுறுத்தாது. ”
“ இப்போதெல்லாம் விரைவில் கோடை வருகிறது.”
“பனிப்படலங்கள் ஒரு கிலோமீட்டருக்காவது உருகி விட்டன.”
“காலநிலை மாற்றம் நிகழ்வதில் சந்தேகமில்லை.”
லே நகரிலிருந்து நுப்ரா பள்ளத்தாக்கு வரை உள்ள கிராமங்களில் பல தலைமுறைகளாக, பல தொழில்களில் எழும் அவலக் குரல்கள் கேட்பதற்கு நிறைய உள்ளன. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, தீவிர மழையால் இன்னும் பல கோடி ரூபாய் இழப்பை அவர்களுக்கு கூட்டியுள்ளன.
ஷாயோக் விருந்தினர் மாளிகையின் உரிமையாளரான குலாம் முகமது, தனது துர்துக் மற்றும் அருகமை கிராமமான சுலுங்காவில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்களை நன்கு அறித்துள்ளார். அவர் சொல்கிறார், “வரப்போகும் மாற்றங்களுக்கு நாங்கள் தயாராகவில்லை என்பது தான் இங்கு பிரச்சினை.”
நுப்ரா என்பது மிகக் குறைந்த வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் அழகிய பனிப்பாறைகளைக் கொண்ட உயரமான குளிர் பாலைவனமாகும். துர்துக் கிராமம் இந்த பிராந்தியத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது. இது, பிரம்மாண்டமான ஷாயோக் ஆற்றின் குறுக்கே வலிமையான மலைகள் மற்றும் பச்சை வயல்களால் சூழப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பண்டைய பட்டுப் பாதையில் இருந்த இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LoC) 10 கிலோமீட்டர் தொலைவிலும், லேவுக்கு வடக்கே எட்டு மணி நேர பயணத்திலும் உள்ளது.









