15 மே 2026. என்னுடைய வழக்கமான வேலைகளுக்கு நடுவே ஒரு துயரச் செய்தி வந்து சேர்ந்தது: 93 குழந்தைகள் குஜராத்தின் சூரத்திலுள்ள புடவை ஆலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். அப்பாஸும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென நான் ஆசைப்பட்டேன்.
மங்கலான வெளிச்சமும் ஊசல் வாடையும் நிறைந்த அறைக்குள் பலவீனமான குழந்தைக்கு அருகே நான் அமர்ந்திருந்தேன். வயல் மற்றும் பறக்கும் பறவைகள் வடிவங்களை நுட்பமாக, ஜரிகை நூலால் பார்த்து தைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டிருந்தார். ஆரி ஊசியை ஊகிக்க முடியாத நிபுணத்துவத்துடன் அவர் கையாண்டு பளபளப்பு தகடுகளையும் முத்துகளையும் சில விலையுயர்ந்த கற்களையும் மரச் சட்டகத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் புடவையில் தைக்கிறார். அவரின் விரல்நகங்களில் நேற்றைய அழுக்கு படிந்திருக்கிறது.
அறைக்குள் சிக்கியிருந்த பிறரை போலவே பெரிய, குழி விழுந்த கண்கள், நீண்ட, மெல்லிய விரல்களை அப்பாஸ் கொண்டிருந்தார். அந்த உற்பத்தி மையத்தின் உரிமையாளர்கள் அத்தகைய அம்சங்கள் கொண்டவர்கள்தாம் ஜரிகை புடவை செய்யும் வேலைக்கு சரியான ஆட்கள் எனக் கூறினர். அமைதியான தலையசைப்பு மற்றும் ஊசியின் அசைவு ஆகியவற்றை தாண்டி, அப்பாஸிடம் வேறெந்த உணர்வும் வெளிப்படவில்லை. வழக்கமான வாழ்க்கைக்கு வெளியே அவர் இருந்தார். நேரமோ தேதியோ வருடமோ தெரியாத நிலையில் அவர் இருந்தார்.
”பள்ளிக்கு செல்லும் ஆசை எனக்கு இல்லை,” என்றார் அவர். “நான் பட்டங்கள் விடுவதுமில்லை,” என நான் தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கு அவர் முணுமுணுக்கிறார். அவரது குடும்பத்துக்கு அவர்தான் வருமானத்துக்கான ஆதாரம். அவர் பகலில் வேலை பார்க்கும் சட்டகங்களுக்கு அருகேயோ அல்லது வெளியே நடைபாதைகளிலோதான் இரவில் தூங்குவதாக கூறினார். காற்றோட்டம் இன்றி புழுக்கம் அதிகமாக இருக்கும் இந்த உற்பத்தி பகுதியின் பழுப்பு நிற கூரைதான் அப்பாஸின் வானம். அந்த மையத்தை விட்டு அவர் வெளியே வந்ததில்லை என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் அதற்கு பிறகு அப்பாஸ் என் நினைவுகளில் தொடர்ந்து பயணிக்கிறார். செய்தியை கண்டதும் தலைப்புச் செய்திகளை பாடலாக்க விரும்பினேன். துயரத்துக்கு கிடாரின் சி மைனர் துணை வந்தது. ஆனால் உருவகம் தோய்ந்து போனது. அவரை சந்தித்து விட்டு திரும்பும்போது நான் சுமந்த துயரத்தை அது கொண்டிருக்கவில்லை.


