கஜ்லியான் விழா ஒன்பது நாட்களுக்கு முன்பே, பந்தல்கந்த் மற்றும் பகெல்கந்த் பகுதி மக்கள், கோதுமையை மண் பானையில் வைக்கும்போது தொடங்கி விடும். அவை பராமரிக்கப்பட்டு, முளைவிடுகையில் தானியங்கள் வணங்கப்படுகிறது. முளை விடும் தானியங்கள் குஜ்லு என அழைக்கப்படுகிறது. கூடைகளில் அவை வைக்கப்பட்டு, பெண்கள் தலைகளில் வைத்து, பாரம்பரிய பாடல்களை பாடிக் கொண்டு, கோவில்களுக்கு கொண்டு செல்வார்கள்.
“கஜ்லியானை பெரிய அளவில் நாங்கள் கொண்டாடுவோம்,” என்கிறார் மம்தா. ஷாதோல் மாவட்ட பச்காவோனிலுள்ள கோவிலுக்கு பெண்கள் சென்று கொண்டிருக்க, அவர் பாடி, தோல்கி (மேளம்) வாசிக்கிறார்.
இப்பகுதியில் பிரபலமாக இருக்கும் இவ்விழா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. ஒற்றுமைக்கான விழாவாக உள்ளூர்வாசிகளால் பார்க்கப்படும் இந்த விழாவில், மன்னித்து கடப்பதுதான் உள்ளடக்கம். வேண்டிக் கொண்டு குஜ்லுவை கொடுத்தால் மன்னிப்பு கிடைத்து, ஒற்றுமை ஓங்கும் என மக்கள் நம்புகின்றனர். பிராமணர்கள் மற்றும் ரஜபுத்திரர்கள் போன்ற உயர்சாதியினர் த்வாஜா ஊர்வலத்தை நடத்தி, தம் வீடுகளில் பூஜைகள் செய்கின்றனர். கோண்ட் மற்றும் பைகா பழங்குடி சமூகங்கள், நாட்டுப்புற பாடல்கள் பாடி ஆடுகின்றனர்.
“பொருட்காட்சி போல அந்த சூழல் இருக்கும்,” என்கிறார் கோவிலை பராமரிக்கும் ராம்ஸ்வரூப் விஷ்வகர்மா. “தூரத்து இடங்களில் இருந்து மக்கள் வந்து விழாவில் பங்கெடுப்பார்கள். பஜனை கீர்த்தனைகள் காற்றை நிறைக்கும். மொத்த கிராமமும் சந்தோஷத்தில் உயிர்ப்பு கொள்ளும்.”


