தேவனேஷ்வரியின் பள்ளி பிற்பகல் 2 மணிக்கு முடியும். ஆனால் அவரின் வேலை முடியாது. தோளில் ஒரு கைப்பையை மாட்டிக் கொண்டு, தலையில் துப்பட்டா போட்டபடி, அவர் 40 டிகிரி செல்சியஸ் வெயிலில் வெளியே செல்கிறார். அவர் செல்வது வீட்டுக்கு அல்ல, விறகு சேகரிக்க. “இந்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியை நான்,” என்கிறார் அவர். “மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பதை நான் உறுதி செய்ய வேண்டும். எனவே விறகு தேடி செல்கிறேன்.”
லக்நவின் கிராமப்புறத்திலுள்ள மால் ஒன்றியத்தின் ரூடன் கெரா ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார் 48 வயது தேவனேஷ்வரி நேகி. அங்கு வேலை பார்க்கும் ஐந்து பேரும் பெண்கள்தான். இரண்டு உதவி ஆசிரியைகளும் மூன்று ரசோயாக்களும் இருக்கின்றனர். குழந்தைகளுக்கு சத்துணவு சமைப்பவர்கள்தான் ரசோயாக்கள்.
ஒன்றிய அரசின் பகல் நேர உணவுத் திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேசத்தின் 1,41,000 அரசு பள்ளிகளில் ஒன்றரை கோடி மாணவர்களுக்கு சத்துணவு போடப்படுகிறது. கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் எரிவாயு சிலிண்டர் இணைப்பு இருக்கிறது. ஆனால் அமெரிக்கா-இஸ்ரேல் ஈரான் மீது தொடுத்திருக்கும் போரால் சிலிண்டர் பற்றாக்குறை, குழந்தைகளுக்கான இத்திட்டத்தை பாதித்திருக்கிறது. பெரும் எண்ணிக்கையிலான பள்ளிகள் பாதிப்பில் இருக்கிறது. ஆனால் அதிகாரமட்டத்தில் இதுகுறித்து அமைதியே நிலவுகிறது.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக, பள்ளி முடித்து தினமும் தேவேஷ்வரியும் நான்கு பேரும் வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக விறகு தேடி செல்கின்றனர். “உள்ளூர் விறகு வியாபாரிகளிடமும் சிலிண்டர் ஏஜென்சியிலும் பேசிப் பார்த்து விட்டோம். ஊர்த் தலைவரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டோம். இந்த கஷ்டமான நேரத்தில் உதவ யாரும் வரவில்லை,” என்கிறார் நேகி.
ஒரு காலத்தில் எளிதில் கிடைத்துக் கொண்டிருந்த விறகுகளை இப்போது லக்நவ் நகரத்தின் வணிகர்கள் கையகப்படுத்துகின்றனர். “எங்களின் எல்லா இருப்பையும் உணவகங்களுக்கு விற்றுவிட்டோம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக் கூடாது என்றில்லை. அனைவருக்கும் வேண்டிய அளவுக்கு எங்களிடம் போதுமான அளவு இல்லை,” என்கிறார் உள்ளூர் விறகு வியாபாரியான தர்மேஷ் யாதவ். “மிச்சம் இருக்கும் கொஞ்சமும் எங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுகிறது. இல்லையெனில், நாங்கள் எப்படி சாப்பிடுவது?”
மாணவர்களும் விறகு சேகரிப்பதில் உதவுகின்றனர். பள்ளிக் கூரையை உரசி நிற்கும் மரங்களின் கிளைகளிலுள்ள சிறு சுள்ளிகளையும் சேகரிக்கின்றனர்.










