“ஓ அதுதான் கடைசி பர்கர். அதை அவர் எடுத்துக் கொண்டார். சாரி, மேடம்,” என்றார் ராகுல் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் அவரை நான் சந்தித்தபோது. பைக்கில் அமர்ந்திருந்த அவர், மாட்டியிருந்த சிவப்பு நிற சொமாட்டோ பை மாலை 6.30 மணிக்கு காலியாகி இருந்தது. “30 பர்கர் பாக்கெட்டுகள் பையில் இருந்தன. பெங்களூரை சேர்ந்த ஒருவர் ‘தேவைப்படும் எவரும் வாங்கிக் கொள்ளலாம்’ என எழுதி அனுப்பியிருந்தார்,” என்கிறார் அவர்.
பிகாரின் தார்பங்கா மாவட்டத்தை சேர்ந்த ராகுல் குமார் யாதவ், பகலில் கல்லூரிக்கு செல்கிறார். போராட்டத்தில் பங்கேற்க அவர் படிப்பை விட்டுவிடவில்லை. அதற்கு பதிலாக இரவில் அவர் மாலை 6 முதல் காலை 6 வரை டெலிவரி நபராக பணிபுரிகிறார். அவர் எடுத்து செல்லும் பொருட்களில், பிற நகரங்களை சேர்ந்தோர் வாங்கி அனுப்பிய உணவும் இருந்தது. பெயர் சொல்லாத நன்கொடையாளர்கள் இன்னாருக்கென இல்லாமல் ஜந்தர் மந்தரில் பசியுடன் இருக்கும் எவரும் வாங்கும் விதமாக அனுப்பிய பார்சல்கள் அவை.
ஜந்தர் மந்தரின் மாணவர் போராட்டத்தில் சிறைபிடிப்பு மற்றும் தடியடிக்கு நடுவே பல திசைகளிலிருந்து உணவு வந்து கொண்டே இருந்தது. பர்கர்கள், சாண்ட்விச்கள், பார்லே-ஜி பிஸ்கட்டுகள் என பல உணவுப் பொருட்கள், இணையவழி செயலிகளின் ‘டெலிவரி நபர்’களால் கொண்டு வரப்பட்டன. முக்கியமாக பக்கத்திலுள்ள குருத்வாராவின் லங்கர் (தன்னார்வலர்களால் சமைக்கப்பட்டு உணவு இலவசமாக விநியோகிக்கப்படும் சமையற்கூடம்) பல பத்தாண்டுகளாக மக்களென திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.








