அவ்வப்போது கேட்கும் பறவை சத்தத்தை தாண்டி, பெண்கள் நாற்று நட ஈர நிலத்தில் அசையும் சத்தம் மட்டும்தான் பின்னணியில் கேட்கிறது. பிறகு ஐந்து பெண்களும் ஒரே நேரத்தில் ஒரு பிகு பாடலை பாடத் தொடங்குகின்றனர்.
ஜூலை அல்லது அஸ்ஸாமிய நாட்காட்டியின் ஆஹார் மாதத்தின் நெல் நடவுக்கான முதல் நாள் நோபுய் என அழைக்கப்படுகிறது. புதிய நாற்றுகளுக்கான நாள் என அர்த்தம். திடாடோரின் சலாகுரி காவோனிலுள்ள ஹிரா சைகாவின் நிலத்தில் வெயில் கடுமையாக இருக்கிறது. புழுக்கம் நிறைந்திருக்கிறது. வேலையோ முதுகை ஒடிக்கிறது. 52 வயது ஹிரா சைகாவுக்கு, இந்த முதல் நாள் நடவில் உதவ நான்கு நண்பர்கள் வந்திருக்கின்றனர். 50 வயது குனிதா சைகியா மருத்துவ செயற்பாட்டாளராக இருக்கிறார். 55 வயது அருணா போரா, பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு சமைக்கும் சமையலர். 35 வயது பிரிஸ்திபர்ணா சொனோவால், பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தவர். 35 வயது நோமி சைகியா விவசாயியாகவும் இல்லத்தரசியாகவும் இருப்பவர். அவர்கள் அனைவரும் குடும்பத் தேவைகளுக்கென தங்களுக்கு இருக்கும் சிறு துண்டு நிலங்களில் விவசாயம் பார்க்கின்றனர். இன்னொரு நாள், அவர்களில் ஒருவருக்கு ஹிரா உதவி செய்வார்.






