“உங்களின் மகள் நன்றாக வளர்ந்து விட்டாள். இன்னும் அவளின் காதுகளை சுலவாவுக்கு நீங்கள் தயார் செய்யவில்லை?” மூத்த பெண்கள் கேட்பார்கள். மகளிடம் திரும்பி, “பெண்ணே… உனக்கு சீக்கிரம் திருமணமாகி விடும். நிச்சயத்தின்போது அவர்கள் கொடுத்த நேரம் முடிவடையவிருக்கிறது,” என்பார்கள். சிறுமியை திருமணத்துக்கு முந்தைய காது தயாரிப்பு சடங்கு குறித்த முதிய பெண்களின் இத்தகைய குரல்கள், என்னுடைய போபா ரபாரி சமூகத்தில் இன்னும் வழக்கமாக இருக்கிறது.
என் உறவினரான நதி பென் மோரி, தன் 17 வயதிலேயே காதுகளை தயார் செய்து கொள்ளத் தொடங்கியது எனக்கு நினைவிருக்கிறது. அவருக்கு தற்போது 24 வயது. அவர் எப்போதும் சுலவா அணிந்திருப்பார். சுலவா என்பது, ஒரு செண்டிமீட்டருக்கும் அதிகமான அகலம் கொண்ட பெரும் தங்கக் காதணிகள். பெண் மணமாகி செல்லும் குடும்பம், இரண்டு தோலாக்கள் (22.32 கிராம்) எடை கொண்ட ஒரு ஜோடி காதணிகளை, திருமண நிச்சயதார்த்தத்தின்போது பெண்ணுக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். காதணிகளின் விலை இரண்டு லட்சம் ரூபாய் பெறும்.
சிரமம் வரும் காலங்களில் சுலவா எங்களுக்கு உதவும். ஆனால் இவற்றை செய்யவென குடும்பங்கள் கடன்படும். தற்காலத்தில் விலைவாசி அதிகமாக இருக்கிறது. எங்களிடமும் அந்தளவு வசதி இல்லை. நாங்கள் மேய்ச்சல் செய்பவர்கள். எங்களின் சொந்த கிராமத்தில், மொத்தம் 3,000 பேர் இருக்கின்றனர். அவர்களில் 60 சதவிகித பேர் கூலி வேலை பார்க்கின்றனர். மிச்ச 40 சதவிகிதம் பேர் கால்நடை வளர்க்கின்றனர்.





