மேற்கு வங்கத்தின் மேற்குப் பகுதியில் உள்ள புருலியாவில் இருக்கும் பாங்கதி அந்த மாநிலத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க கிராமங்களில் ஒன்றாகும். கனிமச் சுரங்கங்கள் அந்தப் பகுதிக்குள் இன்னும் வரவில்லை என்பதால் கிராமத்தினர் அருகில் உள்ள விவசாய நிலங்கள், காடுகள் மற்றும் குளங்களைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது. அத்துடன் அவர்களுக்குத் தேவையான அனைத்து உணவுகளையும் தயாரித்துக் கொள்ளும் சூழலும் உள்ளது.
காலை மூடுபனியில் இருந்து சூரியன் வெளிவரும் முன்பே அங்கு நாள் தொடங்கிவிடுகிறது. இளம் பெண்கள் தங்கள் குடிசைகளின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு இரவு முழுவதும் முட்டைகளை அடைகாக்க கோழிகளை மூடி வைத்திருந்த கூடைகளைத் திறந்து விடுகின்றனர். அது நவம்பர் மாதத்தின் இறுதி நாட்கள். வீட்டு வேலைகளில் இருந்து விடுபட்ட பெண்கள் வயல்களுக்குச் சென்று அங்கு அறுவடை செய்துகொண்டிருந்த ஆண்களுக்கு உதவ கிளம்பிவிட்டனர். பிறர் உள் அறையில் இருந்து ஆடுகளைத் விரைவாக தங்கள் குடிசையின் முன்னால் கட்டிவிட்டனர். எனவே, குட்டிகள் அதன் தாயுடன் விளையாட ஏதுவாக இருக்கும். பிறகு ஆடுகளையும் எருமைகளையும் கொட்டகையில் இருந்து வெளியே அனுப்பினர். ஒரு வீட்டில் தாத்தாவோ பாட்டியோ இருந்தால் அவர் அந்தக் கால்நடைகளை மேய்ச்சலுக்காகப் புல்வயலுக்குக் கொண்டு செல்வர்.
















