யாருக்கு அவர் பெயர் தெரியாது. அவர் பித்து பிடித்து போன கிழவர், அவ்வளவுதான். பகல்களில் சிரித்தும் இரவுகளில் அழுதுகொண்டும் இருப்பதால் அவர் ஒரு பித்தன். சிந்தி அல்லது உருது மொழியில் தனக்கு தானே பேசிக் கொள்வார். அவை ஏதும் புரிவதில்லை. அவர் காலிப் பாடினால் மட்டும் புரியும்:
கொய் வீரனி சி வீரனி ஹை
தஷ்த் கோ தேக் கே கர் யாத் ஆயா
(என்ன மாதிரியான பாழ் பிடித்த பாலைவனம் இது?
இப்படியொரு நிலத்தை பார்க்கும்போது வீடு நினைவுக்கு வருகிறது)
அவரின் வார்த்தைகளை ஒரு கணம் கவனித்தால், ஞானத்துக்கும் பித்துநிலைக்கும் இடையிலான கோடு அழிவதை புரிந்துகொள்ளலாம்.
பல்லாண்டுகளாக அவர் வசிக்கும் வீடு, வசிப்பிடத்தின் மூலையில் இருக்கிறது. சற்று உயரத்தில் அமைந்திருக்கும் அந்த பாழடைந்த வீட்டில், இரண்டு தெருநாய்களின் துணையுடன் கண்காணிப்பில் இருக்கிறார் அவர்.
இந்த வீட்டை உருவாக்க அவர் எப்போது வந்தார் என எவருக்கும் தெரியாது. அவரின் வயதும் தெரியாது. ஆனால் கசங்கிய இந்திய வரைபடம் போல் இருக்கும் அவரது முக சுருக்கங்கள் அவரது முதுமையை சொல்லும்.
நிறைய கதைகள் உண்டு. பிரிவினை காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்தவர் என சிலர் சொல்வார்கள். இன்னும் சிலர் அவரது குடும்பம் பிறகு நடந்த கலவரங்களில் கொல்லப்பட்டது என்பார்கள். இன்னும் சிலர், வியாபாரியாக ஒரு காலத்தில் இருந்து நொடிந்து போனதும் அவருக்கு பித்து பிடித்தது என்றும் மனைவியும் இரு மகன்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்றும் சொல்வார்கள். தாடியுடன் அழுக்கான பச்சை துணியை தலையில் சுற்றியிருக்கும் அவர் இஸ்லாமியரா என்றும் தெரியாது. அழுக்கடைந்த கம்பளத்துக்கருகே இருக்கும் மாடத்தில் தினமும் மாலை விளக்கு ஏற்றி பிரார்த்தனை போல ஏதோ முணுமுணுப்பதால் அவர் இந்துவா என்றும் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் அனைவருக்கும் அவர் மீது பரிவு இருந்தது. மிச்ச மீதியை அவருக்கு கொடுத்தனர். உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது கூட, இருந்ததிலிருந்து கொஞ்சத்தை அவர்கள் கொடுத்தனர்.
எனினும் கடைசி சில நாட்களாக அவர் ஒரு கவளம் கூட உண்ணவில்லை. எப்போதும்போல தெருக்களில் அவர் சுற்றவில்லை. கட்டிப்போட்டது போல் இருந்தார். விளக்கேற்றவும் இல்லை, கலீபை நினைவுகூரவும் இல்லை. யாரையும் அருகே வரவிடாமல் ஒருமூலையில் அவர் ஒடுங்கிப் போனார். இறுதியில் இறந்தும் போனார். முள்வேலியை விழுங்கிவிட்டதாகவும் அது தொண்டையில் சிக்கிக் கொண்டதாகவும் அவர் புலம்பினாரென சிலர் சொல்கின்றனர். இன்னும் சிலர் கோவிட் தொற்றை காரணம் சொன்னார்கள்.


