2021 டிசம்பர் மாதம் குளிர்ச்சியான காலை நேரம். சாலைகள் மூடுபனியால் சூழ்ந்திருந்த நேரத்தில் மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி 70 கிலோமீட்டர் தூரம் அமர் தோர்போலே என்பவர் பைக்கில் ஒரு டீசல் கேனையும், தீப்பெட்டியையும் எடுத்துச் சென்றார்.
தோர்போலே பைக்கை நிறுத்திவிட்டு தனது உடல் முழுவதும் டீசலை ஊற்றியபடி காவல்நிலையத்தை நோக்கி நடக்கிறார். அவர் தீப்பெட்டியை பற்ற வைக்கிறார். அந்த உரசல் சத்தம் வந்த பிறகே காவலர்கள் வந்தனர்.
இச்சம்பவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன், கடன் மீட்பு ஏஜென்டுகள் சொந்த ஊரான பார்ஷிக்கு வந்து அந்த 38 வயது தோர்போலே மற்றும் அவரது குடும்பத்தினரை, அவர் பெற்ற கடன் தொகையை விட ஐந்து மடங்கு திருப்பி செலுத்துமாறு மிரட்டியுள்ளனர். அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தியவர்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் காவல்துறையினர் அவரது வழக்கை எடுத்து விசாரிக்கவில்லை.
ஓராண்டுக்கு முன் 2020 மே மாதம், மராத்திய சமூகத்தைச் சேர்ந்த தோர்போலே தனது சிற்றுண்டி தொழிலை சிறிது விரிவுப்படுத்த விரும்பினார். அவரிடம் இந்த சொற்ப சேமிப்பிலிருந்து சிறிதளவு மனையை அவர் வாங்கினார். அவர் ஏற்கனவே கடையில் விற்று வரும் அவல், வடை போன்ற சிற்றுண்டியுடன் மசாலாக்களையும் விற்க அவர் திட்டமிட்டார். அந்த மனையில் ஒரு சேமிப்பு கிடங்கை அமைக்கவும் அவர் விரும்பினார்.
இதற்காக அவர் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். தோர்போலேவின் முன்னாள் முதலாளி யுவராஜ் பரங்குலேவின் தொழில் பங்குதாரர் கணேஷ் பரங்குலே சிவசக்தி நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளர் என்பதால் அந்த வங்கியில் கடன் வாங்க அவர் முடிவு செய்தார்.
இந்த அறிமுகத்தை வைத்துக் கொண்டு தோர்போலேவிடம் “முன்பு அளித்த விண்ணப்பத்தில் பிழை இருப்பதாக” கூறி மீண்டும் சில ஆவணங்களில் கணேஷ் கையெழுத்துக் கேட்டுள்ளார். இது வழக்கமான நடைமுறை தான் என்று தோர்போலேவும், அவரது மனைவியும் நினைத்துவிட்டனர்.
ஜூலை (2020) தொடக்கத்தில், கடன் கிடைத்துவிட்டதாகவும், தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதமாக கையொப்பமிடப்பட்ட 10 நிரப்பப்படாத காசோலைகளை வைப்புச் செய்யுமாறும் அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
எவ்வித கேள்வியுமின்றி அத்தம்பதி அவற்றை வழங்கினர். “எங்களுக்கு அவர்களுடன் நல்லுறவு இருந்தது,” என்கிறார் தோர்போலேவின் 34 வயது மனைவி சுஜாதா. “நாங்கள் அவர்களை [கணேஷ், யுவராஜ்] நம்பினோம்.”
இந்த நம்பிக்கை ஓராண்டே நிலைத்தது. கடன் மீட்பு ஏஜென்டுகள் அவர்களின் வீட்டிற்கு வந்து சுஜாதாவிடம் ரூ.25 லட்சம் வீட்டுக்கடன் தொகையை திரும்ப செலுத்தாவிட்டால் தோர்போலேவின் சொத்துக்களை வங்கி முடக்கிவிடும் என்று மிரட்டியுள்ளனர். “எனக்கு ஒரே குழப்பம்,” என்கிறார் அவர்.











