ஃப்ரண்ட்லைன் பத்திரிகை உருவாக்கப்பட்ட 1984ம் ஆண்டில் விவசாயிகளின் வீடுகளூக்கு சென்றபோது, எல்லா வீடுகளிலும் ஒரு தம்ளர் பாலுடன் வரவேற்றனர். மேற்கு மகாராஷ்டிராவின் சில பகுதிகளில், வீட்டை விட்டு கிளம்பும்போது இன்னொரு தம்ளரிலும் பால் கொடுத்து அனுப்புவார்கள். கடலோர ஆந்திரத்தில், பாலை வெள்ளி தம்ளரில் கொடுப்பார்கள். விருந்தினர் என்பதற்கான அடையாளமாகவும் விவசாயி வசதியாக இருக்கிறார் என்பதற்கான அடையாளமாகவும் வெள்ளி தம்ளர் இருந்தது.
தமிழ்நாட்டு விவசாய குடும்பங்களில், பித்தளை தம்ளர்களில் பால் கொடுத்தார்கள். சில நேரங்களில் பித்தளை தம்ளரில் அற்புதமான ஃபில்டர் காபி இருக்கும். 1990-களில் வெள்ளி தம்ளர்களுக்கு பதிலாக பல மாநிலங்களில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தம்ளர்கள் வந்தன. 1991ம் ஆண்டுக்கு பிறகும் அவர்கள் பால் கொடுத்தனர். ஆனால் பீங்கான் தம்ளர்கள் வந்திருந்தன. 1990-களின் பிற்பகுதியில் கண்ணாடி தம்ளர்கள் வந்து இடத்தை பிடித்தன.
2000மாம் வருடத்தில், பாலுக்கு பதிலாக டீ வந்தது. மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில், 2003-04 காலக்கட்டத்தில் பிளாக் டீ வந்தது. நம் மீது இருக்கும் அன்பை பிரதிபலிக்கும் வகையில் டீயில் இருக்கும் சர்க்கரையின் அளவு, குறைந்து கொண்டே வந்தது. கிட்டத்தட்ட 2005ம் ஆண்டுக்கு பின்னால், கிளாஸ் தம்ளரும் மறைந்தது. சிறிய அளவு பிளாக் டீ தற்போது, ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கொடுக்கப்படும் மட்டமான பிளாஸ்டிக் கப்களில் கொடுக்கப்படுகிறது.
2018ம் ஆண்டில், மகாராஷ்டிரா சங்க்லியில் நான் சுதந்திரப் போராட்ட வீரரான கணபதி பால் யாதவை சந்தித்தேன். சில மணி நேரங்களுக்கு நீடித்த நேர்காணலுக்கு பிறகு, ஒரு அலுமினிய தம்ளரில் பால் கொடுத்து என்னை அவர் வழியனுப்பி வைத்தார்.

















