கோவிட் தொற்றுக் காலத்தில் ராணுவ தேர்ச்சிக்கான உடற்பயிற்சியை விகாஸ் குமார் நிறுத்த வேண்டியிருந்தது. 2022ம் ஆண்டு தொடக்கத்தில், அவர் அர்ராவிலுள்ள விமான நிலைய மைதானத்தில் 1.6 கிலோமீட்டர் நீள 400 மீட்டர் ட்ராக் ஓட்டத்தை மீண்டும் தொடங்கினார். “அந்த தூரத்தை 5.20 நிமிடத்திலிருந்து 5.25 நிமிடத்தில் நான் முடிப்பேன்,” என்கிறார் அவர்.
அந்த ஓட்டத்தை நாளுக்கு 5-6 தடவை என நேரம் பார்த்து அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். கூடுதலாக ஒரே நேரத்தில் 8-10 புல்-அப்களும் பல ஸ்குவாட்களும் புஷ் அப்களும் பிற பயிற்சிகளும் செய்வார். “உடற்பயிற்சி (ராணுவ) தேர்வுகளில் பங்கு பெற்றிருந்தால், எனக்கு ‘எக்ஸெலண்ட்’ மதிப்பு கிடைத்திருக்கும்,” என்கிறார் அவர். போட்டியில் பங்குபெறும் ஒருவர், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னமே பந்தயத்தை நிறைவு செய்துவிட்டால், ராணுவ அதிகாரிகள் அந்த வார்த்தையை வெற்றி பெற்றவனின் நெஞ்சில் முத்திரை குத்துவார்கள்.
தேர்ச்சிக்கான உடல் பரிசோதனைக்கு விகாஸ் தயாராக இருந்தார்.
ஆனால் ஜூன் 2022-ல் அவரைப் போன்ற இளைஞர்களுக்கு கோவிட் தொற்றைக் காட்டிலும் கொடுமையான ஒரு விஷயம் நடந்தது. அது கொள்கை ரீதியாக கொண்டு வரப்பட்ட நோயாக இருந்தது.
அதற்கு பெயர் அக்னிபாத் திட்டம். ஒருவேளை விகாஸ் தேர்ச்சி பெற்றாலும் ‘எக்ஸெலண்ட்’ என்கிற முத்திரை அவருக்கு கிடைக்காது. ‘அக்னிவீர்’ என்ற முத்திரைதான் அவரின் உடையில் குத்தப்படும்.
















