“முஸ்கெனியின் பசிய மென்மையான இலைகள், மழைக்கு பிறகு இனிமையாக இருக்கிறது. வெயிலில், இலைகள் காய்ந்து கடினமாகி விடும்,” என்கிறார் கெளஷல்யா. இரு அறை உள்ள கல் வீட்டின் வராண்டாவிலுள்ள திறந்தவெளி சமையலறையில் அவர் இருக்கிறார். பேசிக் கொண்டே அவர் கழுவப்பட்ட பருப்பை ப்ரஷர் குக்கரில், முஸ்கெனி, பச்சை மிளகாய்கள், மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றுடன் போடுகிறார்.
“முஸ்கெனி பாஜி (இலைகள்) துவரை மற்றும் கொண்டை கடலை நன்றாக இருக்கும்,” என்னும் கெளஷல்யா, முஸ்கெனி இலைகளை சமைக்கும் பல குறிப்புகளை நம்முடன் சந்தோஷமாக பகிர்ந்து கொள்கிறார். சத்தீஸ்கரில் வளரும் இந்த செடி, வழக்கமாக பருப்புடன் சேர்த்து செய்யப்படும். மூன்று, நான்கு விசில் அடிக்கும் வரை காத்திருக்கும் அவர், பூண்டு, தக்காளி, வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய்களை பருப்புடன் சேர்க்க, பனிக்கி அரிவாள் மனை கொண்டு தயார் செய்கிறார்.













