"நான் 17 வயதில் மாலுமியாக என்னுடைய முதல் வேலையில் சேர்ந்தபோது, என் அப்பா கடலில் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது என்று கூறுவார். அவர் சொன்னது பொய் போலும் [அப்பா ஜூட் போல்தே தே கி, ஜெ தரியா மா ரெஹ்தா ஹொய் எம்னே மௌத் நோ டர் நா ஹோய்],” என்று ஓமன் வளைகுடாவில் மூழ்குவதற்கு முன்பு ஆறு மாதங்களாக 'எம்எஸ்வி அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி' என்ற கப்பலை செலுத்திய தனது கைகளை உற்றுப் பார்த்தவாறே கூறுகிறார், 43 வயதான நசீர் ஜுனாஸ் பாயா. கேப்டனின் உத்தரவின் பேரில் ஹார்முஸ் நீரிணை வழியாகத் தான் செலுத்திய கப்பலை ஏவுகணை தாக்கிய அந்தப் பயங்கரமான தருணத்தை அவர் நினைவுகூர்கிறார்.
"அப்பா ஜூட் போல்தே தே [என் அப்பா பொய் சொல்லியுள்ளார்], மேன் தோ லாஞ்ச் மேன் பானி தேக் கர் ஹைபத் கா கயா தா [கப்பலுக்குள் தண்ணீர் வருவதை பார்த்தவுடனேயே நான் மிரண்டுபோனேன்]. அது 2026 மே 8 அன்று நள்ளிரவு 12 மணியை தாண்டி இருந்தது. ஒரு ஏவுகணை எங்களை முழ்கடிக்க வந்தது. ஹார்முஸ் வழியாக செல்வதற்கு ஈரான் எங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. எனவே, தாக்கியது அவர்களாக இருக்க வாய்ப்பில்லை. நாங்கள் பலமாக குண்டுவெடிக்கும் சத்தம் ஒன்றைக் கேட்டோம். அதைத் தொடர்ந்து பெரிய தீ விபத்தும் ஏற்பட்டது." நசீர் மிகவும் பொறுமையாக, தனது மக்களிடம் பேசும் குச்சி-சிந்தி மொழியைத் தவிர்த்து, இந்தி மற்றும் குஜராத்தி கலந்து பேசுகிறார். குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரமான சலாயாவில் உள்ள அவரது ஒற்றை மாடி வீட்டில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம்.
























