பெரும்பாலான குடும்பங்கள் விலங்கை முதலில் வாங்கிவிட்டு, தீவனத்தை பற்றி பிற்பாடு கவலைப்படுவார்கள். ஆனால் ஜஸ்விந்தர் கெளரும் அவரது கணவர் ஜக்சீர் சிங்கும் இதை தலைகீழாக செய்கின்றனர்.
மாடு வாங்க வசதியில்லாத நிலையில் இருக்கும் அவர்கள், தீவனம் சேமிப்பதற்கான குப்புவை கட்டுகின்றனர். இந்த வருடத்தில் 75 சதவிகிதம் வரை விலை சரிந்திருக்கும் தூரியால்தான் (வெட்டப்பட்ட கோதுமை கதிர்கள்) அவர்கள் இப்படி செய்கிறார்கள். 2024ம் ஆண்டில் ஒரு குவிண்டால் தூரி 800-1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த வருடத்தில் இந்த விலை ஒரு குவிண்டாலுக்கு 200-250 ஆக குறைந்திருக்கிறது.
எனவே விலங்கை வாங்குவதற்கு முன், சங்ரூர் மாவட்டத்திலுள்ள சங்க்லிவாலா கிராமத்து வீட்டில் தீவன சேமிப்பகம் கட்டுவதென தம்பதியர் முடிவெடுத்திருக்கின்றனர்.
குடும்பத்துக்கு உபரி சத்தும் தேவை. இருவரின் 27 வயது மகன் கபடி சாம்பியனாக இருக்கிறார். குடும்பம் வளர்க்கும் மாட்டின் ஒரு குவளை பால் அவருக்கு உதவும். “மேம்பட்ட உணவு, குறிப்பாக ஊருக்குள் கபடி விளையாடும் எங்களின் மகனுக்கு முக்கியம்,” என்கிறார் 50 வயது ஜஸ்விந்தர். அவர்களுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். ஒருவருக்கு மணமாகிவிட்டது. இன்னொருவரான 25 வயது ககன் முதுகலை முடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் தாய் உடல் நலிந்ததிலிருந்து வீட்டை பார்த்துக் கொள்கிறார் அவர்.
குப்பு கட்டுவதென குடும்பம் முடிவு செய்ததும், ஜக்சீரின் தாய் வழி உறவினரான குர்மேய்ல் சிங்கை அணுகினர். அனுபவம் வாய்ந்த 60 வயது கைவினைஞரான அவர், கடந்த 40 வருடங்களில் 2,000 குப்புகளை செய்திருப்பதாக சொல்கிறார். அவர் கூறுகையில், “கோதுமை அறுவடைக்கு பிறகு வரும் மாதங்களில் தினசரி குறைந்தபட்சம் இரண்டு குப்புகளை நாங்கள் செய்திருக்கிறோம்,” என்கிறார்.
குப்பு என்பது குறைந்த செலவிலான குவிமாடம் போன்ற வடிவத்தை கொண்ட தீவன சேமிப்பகம் ஆகும். பஞ்சாபின் கிராம வாழ்க்கைக்கு ஒரு காலத்தில் அடையாளமாக இருந்த இது, தற்போது அதிகம் காணப்படுவதில்லை. டெல்லியிலிருந்து பஞ்சாபின் சங்க்லிவாலாவுக்கு செல்லும் வழியில் மிகச் சிலதான் கண்களில் பட்டன.



















