இது பல வழிகளில் பார்த்தால், ஒரு தெய்வீகக் கூட்டம்.
வருடத்திற்கு ஒரு முறை, பஸ்தார் பகுதியின் தெய்வங்கள், மாவட்டத்தின் தலைமையகமான நாராயண்பூரில் உள்ள மாவ்லிமேலாவில் சந்திக்கின்றன. 700 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த வருடாந்திர மடாய் (கடவுள்களின் கூட்டம்) அறுவடைக்குப் பின் நடத்தப்படுகிறது.
தொலைதூர அபுஜ்மத்திலிருந்து (அபுஜ்மர் மற்றும் அபுஜ்மத் என்றும் உச்சரிக்கப்படுகிறது) கான்கர் வரை என சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெய்வங்களும் தனிப்பட்ட பழங்குடி குடும்பங்கள் மற்றும் சமூகங்களால் இங்கு கொண்டு வரப்படுகிறது. அவர்களின் மகிழ்ச்சியான பயணமும் வருகையும் இசை மற்றும் நடனத்துடன் நிகழ்கிறது.
மக்கள், தங்கள் குடும்ப தெய்வங்களை மடாய்க்கு கொண்டு வருகிறார்கள். இங்குள்ள பழங்குடி மக்கள், தங்கள் மூதாதையர்களையும் தெய்வங்களாகக் கருதுகின்றனர். மேலும் மாவ்லிமேலாவில், ஒரு குடும்பத்தின் தெய்வம் மற்றொரு குடும்பத்தின் தெய்வங்களை சந்திக்கிறது. பழங்குடி தெய்வங்கள் மனிதர்களை போல நடந்து கொள்கின்றன. அவற்றுக்கு உறவினர்களும் இருக்கின்றன. அவர்களை சந்திக்கும் தெய்வங்கள், கட்டித்தழுவி, ஒன்றாக கொண்டாடுகின்றன.
“இது ஒரு வாரம் வரை நீடிக்கும் மேளா,” என்கிறார் பழங்குடியினர் அல்லாத நாராயண்பூர்வாசியான வயதான விஸ்வநாத் தேவாங்கன். இந்த நிகழ்வுகளைக் காண, பழங்குடியினர் அல்லாத பலரும் வந்துள்ளனர்.
இது மாவ்லி மாதாவின் [தாய் தெய்வம்] மேளாவுடன் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து அருகில் உள்ள பகுதிகளில் இருந்து பிற தெய்வங்கள் வருகின்றன. மேலும் படிக்க: கேங்க்ரெல்: இடம்பெயர்ந்த தெய்வத்தின் நடனம்
கதகதப்பான பிப்ரவரி மாத காலையில் வந்துள்ளேன். நாராயண்பூரில், சந்தைக்கு அருகில் அமைந்துள்ள பெரிய சமூக மைதானம் வேகமாக நிரம்புகிறது. தங்கள் கிராமங்களிலிருந்து பேருந்துகளிலும், டாக்சிகளிலும் மற்றும் நடந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். பலருக்கு காலணிகள் கூட இல்லை.
























